இவ்வாண்டு முதற்கொண்டு கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பவியல் பட்டப்படிப்புகள் கற்கை நெறி ஆரம்பிக்கப்படவுள்ளதாக
அப்பல்கலைக்கழகப் பதிவாளர் பல்கலைக்கழக பதிவாளர் விஸ்வநாதன் காண்டீபன் தெரிவித்தார்.
இது விடயமாக வியாழக்கிழமை (05.01.2017) விவரம் தெரிவித்த அவர், மேலும் கூறியதாவது@ 2017 ஆண்டில் தொடங்கவுள்ள தொழில்நுட்பவியல் பட்டப்படிப்புகள் கற்கை நெறிக்காக 83 மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளார்கள்.
எதிர்வரும் 18.01.2017ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்வியாண்டில் தொழில்நுட்பக் கல்வியில் உயிரியல் முறைமைத் தொழில்நுட்பவியல் மாணிப் பட்டப்படிப்பிற்காக நான்காண்டு கற்கைநெறியைத் தொடர்வதற்காக இந்த 83 மாணவர்களும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அடுத்துவரும் ஆண்டுகளில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியல் மாணிப் பட்டப்படிப்பு மற்றும் எந்திரவியல் தொழில்நுட்ப மாணிப் பட்டப்படிப்பு ஆகியன ஆரம்பிக்கப்பட உள்ளன.
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பவியல் பீடம் அமைப்பதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஒப்புதல் ஏற்கெனவே கிடைக்கப்பெற்றுள்ளது.
இதில் உயிரியல் முறைமைத் தொழில்நுட்பவியல் துறை மற்றும் பல்துறைக் கற்கைகள் துறை ஆகிய இரு துறைகள் ஆரம்பத்தில் அமைக்கப்படும்.
மேலதிகமாக சக்தி மற்றும் சூழல் துறை, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில் நுட்பவியல் துறை ஆகிய இரு துறைகள் வருங்காலத்தில் இணைக்கப்படும்.
பொருத்தமான தொழில்நுட்ப அறிவும் பின்புலமும் உள்ள இளைஞரை உருவாக்குவது நாட்டில் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும்.
மேலும், இது சுயதொழில் முயற்சியாக்கங்களை உருவாக்க வழிவகுக்கும். நாட்டின் அபிவிருத்திக்கு தொழில்நுட்பவியல் துறைசார் பட்டதாரிகளின் உருவாக்கம் மிகவும் அவசியமானதென்பது கருத்திற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அனைத்துப் பல்கலைக்கழகங்களும் புதிய தொழில்நுட்பவியல் பட்டப்படிப்பு பாடநெறிகளை 2017இல் இருந்து ஆரம்பிக்கின்றன.
0 Comments:
Post a Comment