30 Dec 2016

தேசியம் இனம் சார்ந்த வழக்குகளை விசேட நீதிமன்றங்கள் மூலம் நடாத்தப்படுகின்றபோது மட்டும் தான் நீதிகிடைக்கும் - கிழக்குமாகாண விவசாய அமைச்சர்.

SHARE
தேசியம் சார்ந்த இனம் சார்ந்த வழக்குகளை விசேட நீதிமன்றங்கள் மூலம் நடாத்தப்படுகின்றபோது மட்டும்தான் நீதிகிடைக்கும் என்று நாம் நினைக்கின்றோம்.
அத்துடன் ஜெனீவாவினுடைய அடுத்த அமர்விற்கு முன்னதாக இலங்கை அரசாங்கம் எடுக்க இருக்கின்ற தீர்மானத்தின் அடிப்படையில் தான் இலங்கை அரசாங்கத்தின் தலைவிதியும் தங்கி இருக்கின்றது என கிழக்கு மாகாணவிவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.

செவ்வாய்பக் கிழமை (27) களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் கிழக்கு மாகாண பாலர் பாடசாலைகள் கல்விப் பணியகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மட்டக்களப்பு பட்டிருப்பு கல்விவலய பாலர் பாடசாலைகளின் வினைத்திறன் கண்காட்சி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்…

உலகிலே மிகச்சிறந்த பணி என்ன வென்றால் அது ஆசிரியர் பணிதான் அதில் நாம் காணும் திருப்தி, உற்சாகம், இன்பம் போன்று வேறு எங்கும் அத்தகைய ஒரு இன்பத்தை, ஆத்மதிருப்தியை அடைந்திட முடியாது. அதிலும் முன்பள்ளி என்பது பிஞ்சுக் குழந்தைகளின் திறன்களை அவர்களுக்கு ஏற்ற விதத்தில் விருத்தி செய்யும் இடம். ஆனால் அவர்களை விருத்தி செய்வதற்கு ஏற்ற விதத்தில் முன்பள்ளி ஆசிரியர்களை விருத்தி செய்யமுடியாத ஒருகவலையோடு நாங்கள் எமது மாகாணசபையில் இருக்கின்றோம் என்கின்ற விடயத்தை இங்கு சொல்லியே ஆக வேண்டும். 


முன்பள்ளி ஆசிரியர்களின் பொருளாதார நிலைமைகள் தொடர்பாக நாங்கள் என்ன, என்ன நடவடிக்கையெல்லாம் எடுக்க இருந்தோம் அது தொடர்பாக முயற்சித்து தற்போது அவர்களுக்கு வழங்கப்படுகின்ற தொகையைப் பெற்றுக் கொடுப்பதற்கு நாங்கள் எவ்வாறான நடவடிக்கைகளை யெல்லாம் மேற்கொண்டோம் என்பது பற்றிபலரும் அறிவார்கள்.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் இன்னுமொருவிசேட அம்சம் என்ன வென்றால் வடமாகாணத்தில் முன்பள்ளிகளை இராணுவத்தினரும் நடாத்துகின்றார்கள் ஆனால் எங்களுடைய மாகாணத்தில் அந்த துர்ப்பாக்கியம் இல்லை. முற்று முழுதாக சிவில் ஆசிரியர்கள் இதனை எடுத்துநடாத்துகின்றீர்கள் அந்த வகையில் கிழக்கு மகாணம் ஒருபாக்கியம் செய்த மாகாணம் என்றுதான் நான் சொல்லுவேன்.

தற்போதைய காலத்தில் இந்த நாட்டின் நீதி தொடர்பாக நாம் இன்னுமொரு கேள்விக் குறியைப் போட வேண்டியவர்களாக இருக்கின்றோம். 
மயிலந்தணையிலே, குமாரபுரத்திலே நடைபெற்ற படுகொலைகள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்றன. ஆனால் அந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சாட்சிகளால் அடையாளம் கண்டு நீதிமன்றில் நிரூபிக்கப்பட்ட பின்பும் கூட அவர்கள் குற்றமற்றவர்கள் என்ற ரீதியில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். 

இது நீதித்துறை தொடர்பாக ஒருமிகப்பெரிய கேள்விக்குறியை தோற்றியுள்ளது.
அது மட்டுமல்லாது தற்போது நடைபெற்று முடிந்திருக்கின்ற எங்களுடைய மாமனிதர் ரவிராஜ் அவர்களின் படுகொலை தொடர்பான வழக்கு. அதுவும் இதேநிலைமையைக் கெண்டிருக்கின்றது. இந்த வழக்கு யுகள் யூரிகள் சபை முன்னிலையில் இடம்பெற்றவை. இந்த யூரிசபைகள் குற்றம் சாட்டப்பட்டவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப சிங்களம் பேசுகின்ற யூரிக்களின் முன்னிலையில் நடைபெற்றது. இந்த மூன்று வழக்குகளிலுமே குற்றம் சாட்டப்பட்டவர்கள் முற்று முழுதாகவிடுதலை செய்யப்பட்டிருக்கின்றர்கள். எனவேதான் இந்த நாட்டினுடைய நீதி தொடர்பாக நாங்கள் நியாயமானதொரு குரலை எழுப்புகின்றோம்.

இவ்வாறான நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும் போது எமது போர்க்குற்ற விசாரணைகள் நடைபெறுகின்றபோது நாங்கள் மிகவும் விழிப்போடு இருந்து எங்களுக்கு இருக்கின்ற ஐயப்பாடுகளைச் அழுத்திச் சொல்ல வேண்டியவர்களாக இருக்கின்றோம். ஏனெனில் இந்தநாடு இன்னும் சர்வதேச நியதிகளுக்கு ஏற்றவிதத்தில் நீதியை வழங்கக் கூடிய தகுதியைப் பெறவில்லையா என்கின்ற கேள்வி எமது மனங்களில் எழுந்திருக்கின்றது.

இதில் வெளிப்படையாக தெரிவது சிங்களம் பேசுகின்றயூரி சபை அமைக்கப்பட்டமைதான் இவர்களின் விடுதலைக்குக் காரணம் என்றாகின்றது ஏனெனில் மயிலந்தனை வழக்கில் நீதிபதி ஸ்ரீஸ்கந்தராசா அவர்கள் யூரிசபையின் தீர்ப்பினைத் தொடர்ந்து மீண்டும் ஒருமுறை யூரிசபைக்கு அனுப்பியும் கூட அவர்கள் ஒரேதீர்ப்பைத் தான் சொன்னார்கள். எனவே இவற்றைப் பார்க்கும் போது எந்த விதமான விசாரணைகளும் இல்லாமலேயே தீர்ப்புவழங்கலாம் போலிருக்கின்றது.

எனவேதான் இவ்வாறான வழக்குகளின் போது அதாவது தேசியம் சார்ந்த இனம் சார்ந்த வழக்குகளை விசேட நீதிமன்றங்கள் மூலம் நடாத்தப்படுகின்ற போது மட்டும் தான் நீதிகிடைக்கும் என்று நாம் நினைக்கின்றோம். அந்த வகையில் எதிர்காலத்தில் நீதி தொடர்பாக நாங்கள் உரிய முறையில் உரியவர்களுக்கு எடுத்துச் சொல்லுவோம். 

இது தொடர்பாகயாரும் குழம்ப வேண்டிய அவசியமும் இல்லை. ஊணர்ச்சிவசப்பட வேண்டிய அவசியமும் இல்லை. நாங்கள் மிகக் கண்ணும் கருத்துமாக இந்தவிடயத்தில் செயற்படுவோம் என்பதை இங்கு சொல்லிவைக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். 

அடுத்து நாடாளுமன்றில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற அரசியல் சாசணம் அமைத்தல் தொர்பாக ஐந்து உபகுழுக்களின் அறிக்கைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அது பற்றியும் நாங்கள் ஆராய்வோம். சொல்லப் போனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த பல்வேறுவிடயங்கள் இந்த ஐந்து அறிக்கைகளிலும் தரப்பட்டிருக்கின்றன. 

இவற்றை அடுத்தகட்டத்திற்கு நகர்த்துகின்றபோது இது குறைவுபடாத வகையில் அதனைச் செழுமைப் படுத்திட வேண்டிய பொறுப்பு எமது உறுப்பினர்களின் கைகளில் இருக்கின்றது. அதனை நாங்கள் செய்வித்துத் தருவோம். அந்த வகையில் நாங்கள் செல்லுகின்ற பாதைகளில் எங்களுக்கு வெற்றி ஏற்படவேண்டும். அது மட்டுமல்ல ஜெனீவாவினுடைய அடுத்த அமர்விற்கு முன்னதாக இலங்கை அரசாங்கம் எடுக்க இருக்கின்ற தீர்மானத்தின் அடிப்படையில் தான் இலங்கை அரசாங்கத்தின் தலைவிதியும் தங்கி இருக்கின்றது என்ற விடயத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே சுட்டிக் காட்டி இருக்கின்றது. தற்போதும் சுட்டிக் காட்டுகின்றது. எனத் தெரிவித்த அவர்,

திங்கட் கிழமை (26) எமது மாவட்டஅபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எமது ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியம் தொடர்பாக எமது உறுப்பினர்கள் அங்கு உடினடியாக அந்தவிடயத்தை எதிர்த்து அதற்கான தீர்வைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றார்கள். ஊடகம் என்ன செய்கின்றது என்பது வேறு ஒரு கேள்வி ஆனால் ஊடகத்திற்கு ஊறு ஏற்படாதவிதத்தில் நாங்கள் நடந்துகொள்வோம் என்றும் அவர் தெரிவித்தர். 

SHARE

Author: verified_user

0 Comments: