22 Dec 2016

மங்களராமய விகாராதிபதி மட்டக்களப்பை விட்டு அகற்றப்பட வேண்டும் - ஸ்ரீநேசன் எம்.பி.

SHARE
புதன்கிழமை (21) புத்தசாசன மற்றும் நீதித்துறை அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவின் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன, மத நல்லிணக்கம்
தொடர்பான கலந்துரையாடல் ஒன்றிற்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இக் கலந்துரையாடலில் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ் அமீர்அலி நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன் மற்றும்  அலிசாகிர் மௌலானா ஆகியோருடன் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பட்டிப்பளை பிரதேச செயலாளர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

புத்தசாசன மற்றும் நீதித்துறை அமைச்சர்  விகாரையில் வழிபாடுகளை  மேற்கொண்டதோடு பொதுபல சேனாவின் தலைவர் ஞானசார தேரர், மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மற்றும் சிங்கள மக்கள் பிரதிநிதிகளுடன், கலந்துரையாடலை மேற்கொண்ட பின்னர் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் குறித்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இக்கலந்துரையாடலில் விகாராதிபதி மற்றும் சிங்கள மக்கள் எதிர் கொண்டு வரும் பிரச்சினைகள் மற்றும் இன நல்லிணக்கம் தொடர்பாக அமைச்சரினால் பிரஸ்தாபிக்கப்பட்டது, எனினும் தமது பிரிவில் சகல இன மக்களும் மிகவும் கௌரவமாக நடத்தப்படுவதாகவும் விசேடமாக பௌத்த குருமார் மிகவும் கௌரவத்துடனும் கண்ணியத்துடனும் நடாத்தப்படுவதாகவும் பட்டிப்பளை பிரதேச செயலாளர் குறிப்பிட்டார். எனினும் ஒரு பௌத்த மத குரு அரச சேவைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வதாகவும்  தெரிவித்தார்.

இக் கலந்துரையாடலின் போது நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரரின் கடந்த கால நடவடிக்கைகள் தொடர்பாக எடுத்துரைத்ததுடன், இம்மாவட்டத்தில் இன, மத நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமாயின்  இனவாத கருத்துக்களை கக்கும் மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து அகற்றப்பட்டு, பதிலாக பல்லினமக்கள் மத்தியில் இனநல்லுறவை ஏற்படுத்தக்கூடிய பண்புமிக்க தேரர் ஒருவரை நியமிக்குமாறு வேண்டுகோளை விடுவித்தார். 

மேற்படி தேரரின் நடவடிக்கைகள் தொடர்பான வீடியோ காட்சிகளை நாடாளுமன்றத்தில் வைத்து அமைச்சருக்கு காண்பித்தமையையும் ஞாபகப்படுத்தினார், மேலும் இவர் அகற்றப்படாவிட்டால் இன, மத நல்லிணக்கத்திற்கான ஒற்றுமையினை இம் மாவட்டத்தில்  ஏற்படுத்த முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: