மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக்கு பயன்படுத்துகின்ற பணத்திலே சுமார் 15 வீதமான பணத்தொகை இடர்காப்பு வேலைத் திட்டங்களுக்காகச் செலவு செய்து
வருகின்றோம்.என மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு - ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலகப் பிரிவின் கீழ் வரும் மிச்நகர், மீராகேணி, ஆறுமுகத்தான்குடியிருப்பு, ஏறாவூர் நகர் மற்றும் செங்கலடி உள்ளிட்ட பல ஊர்களை மாரிகால வெள்ளப்பாதிப்பிலிருந்து காப்பதற்காக ரூபாய் 36 மில்லியன் செலவில் வடிகாலமைப்புத் திட்ட ஆரம்பிப்பு நிகழ்வு வியாழக்கிழமை (22) ஏறாவூர் மிச்நகரில் இடம்பெற்றது.
நிகழ்வில் கலந்து கொண்டு தொடர்ந்து பிரதேச மக்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய நெடுஞ்செழியன்,
காலங்காலமாக ஏற்படும் இயற்கை அனர்த்தங்களினால் முழு மட்டக்களப்பு மாவட்டமுமே ஒரு இடர் வலயமாக மாறியிருக்கின்றது.
நிலைத்து நிற்கக் கூடிய அபிவிருத்தி ஒன்று ஏற்பட வேண்டுமாக இருந்தால் அனர்த்தத் தடுப்பு வேலைத் திட்டங்களிலே நாங்கள் அதிமுக்கிய கவனத்தைத் திசை திருப்ப வேண்டும்.
இந்த விடயத்தில் அக்கறை காட்டாமல் வேறேந்த அபிவிருத்திகளை மேற்கொண்டும் பயனில்லாமல் போய் விடும்.
வழமையாக அனர்த்தங்களை எதிர்கொள்வது, பின்னர் அவற்றுக்கான நிவாரணங்களை வழங்குவது, பின்னர் நிவாரணத்தை முடித்துக் கொண்டு மீண்டும் அபிவிருத்திக்குச் செல்வது பின்னர் செய்து முடிக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை அனர்த்தத்தினால் இழந்து நிற்பது மீண்டும் நிவாரணம் இப்படியாக ஒரு பின்னடைவு நிகழ்ச்சி நிரல் விஷச் சக்கரத்தில் நாம் சுழன்று கொண்டிருக்கின்றோம்.
இப்படிப்பட்ட ஒரு விஷச் சக்கரமாக நாம் எமது மாவட்டத்திலே சுழன்று கொண்டிருக்கும் அனர்த்த நிலைமைகளை சற்று சீர் தூக்கிப் பார்த்து நீடித்து நிலைக்கக் கூடிய அபிவிருத்தியை நோக்கி எமது பார்வையைச் செலுத்த வேண்டும்.
எதிர்பார்த்த அபிவிருத்தி இலக்கை அடைந்து கொள்வதற்கான ஆக்கபூர்வ முயற்சிகளில் அனர்த்த தடுப்புக்கு முக்கியத்துவம் வழங்குகின்ற போது எமது பின்னடைவு நிகழ்ச்சி நிரலில் இருந்து நாம் வெளியேறி முன்னேற்றப் பாதையை அடைந்து அதிலிருந்து பயணிக்கலாம்.
மாவட்டத்தின் அனர்த்தத் தடுப்பிலே கிழக்கு மாகாண முதலமைச்சர் எடுத்துக் கொள்ளும் சீரிய அக்கறை பாராட்டப்படும் ஒரு முன்னுதாரணமாக உள்ளது.
அனர்த்தத் தடுப்பு முயற்சிகள் தொடர்ந்தேர்ச்சையாக இந்த மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுவதன் மூலம் அபிவிருத்தியின் முழுமையான பயனை பெற்றுக் கொண்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை சிறப்பானதாகப் பேணிக் கொள்ள முடியும்.” என்றார்.
0 Comments:
Post a Comment