கிழக்கிலும் வடக்கிலும் முன்நிர்மாணிக்கப்பட்ட வீடுகளைப் பெற விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்களைக் கோரியுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வளிப்பு. மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு அறிவித்தள்ளது.
வீடுகள் தேவையானோர் இதற்காக பிரதேச செயலகங்களில் கிடைக்கப்பெறும் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து அடுத்தாண்டு (2017) ஜனவரி மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் கிராம சேவகர் மற்றும் பிரதேச செயலாளரின் சிபார்சுடன் பிரதேச செயலாளரிடம் நேரடியாகவோ அல்லது தபால் மூலமோ கிடைக்கச் செய்து விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்டமைக்கான உறுதிச் சீட்டைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கேட்கப்பட்டுள்ளது.
அத்துடன், அந்த விண்ணப்பப் படிவத்தின் ஒரு பிரதியை இல 356 டீ காலி வீதி கொழும்பு – 03 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது@ கிழக்கு வடக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் தேவைப்படுகின்றது.
அதனைக் கருத்திற்கொண்டு முதற்கட்டமாக உடனடியாக முன்நிர்மாணிக்கப்பட்ட 10 ஆயிரம் வீடுகளை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சர்வதேச நியமங்களுக்கு அமைவாக சூழல் மற்றும் சமூக அங்கீகாரத்துடன் கூடிய வசதியான இவ்வீடுகள் உலகின் பெயர்பெற்ற முன்னணி நிறுவனத்தின் ஊடாக நிர்மாணிக்கப்படவுள்ளது.
இவ்வீடுகளுக்கு 30 வருடகால உத்தரவாதத்தை அரசாங்கம் வழங்கியுள்ளது.
அதேவேளை இவ்வீடுகள் குறைந்தபட்சம் 60-70 வருட கால பயன்பாட்டுக்குரியதென்றும் இந்த நிறுவனம் சுட்டிக்காட்டுகின்றது.
வசிப்பிட அறை, சமையலறை, தனியான கழிவறை, மற்றும் இரு அறைகளுடன் கூடிய 550 சதுர அடி பரப்பளவு கொண்டவையாக இவ்வீடுகள் உள்ளன.
மேலும், சூரியக்கல மின்சார வசதி, குழாய் நீர்க்கிணறு, சமையல் எரிவாயு அடுப்பு, சமையலறை அலுமாரி ( Pயவெசல ஊரிடிழயசன), மின் விசிறிகள் 03, மின்சாரத்தைப் பெறுவதற்கான கம்பிகள் பொருத்தப்படல் உட்பட இன்னும் சூழல் வெப்பத்தைவிட 3-5 பாகை செல்சியஸ் குறைவான சௌகரியத்துடன் கூடிய வசிப்பிட சூழல் கொண்ட வீடுகளாக இவை உள்ளன என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.
முன்நிர்மாணிக்கப்பட்ட இவ்வீடுகளின் மாதிரித் திட்டத்தைப் பார்வையிட விரும்புவோர் யாழ்ப்பாணத்தில் ஒஸ்கா ஒழுங்கை, செல்வபுரம், பலாலி வீதி, உரும்பிராய் தெற்கு கோப்பாய் ஆகிய இடங்களுக்கு வருகை தரமுடியும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment