திருகோணமலை மாவட்டத்தில் இம்முறை பெரும்போகச் செய்கையின் போது 42 ஆயிரம் ஏக்கர் நெல் மற்றும் உப உணவுச் செய்கை பருவ மழையின்றிக் கருகியுள்ளதாகவும் இது
விவசாயிகளுக்கு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் திருகோணமலை மாவட்ட விவசாய விரிவாக்கல் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் எம்.குகதாஸன் தெரிவித்தார்.
எதிர்பார்த்த அளவு பருவமழை கிடைக்காமற்போனதால் விவசாயச் செய்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்து அவர் விவரங்களைத் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் தெரிவித்த அவர்,
இம்முறை திருகோணமலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மானாவாரி (வான்மழையை நேரடியாக நம்பி மேற்கொள்ளப்படும் பயிர்ச் செய்கை) நெற் செய்கையில் 2016.12.26 ஆம் திகதி வரை சுமார் 90 வீதம் கருகி விட்டன.
இவ்வாண்டு திருகோணமலை மாவட்டத்தில் 12 ஆயிரம் ஹெக்ரேயர் நிலப்பரப்பில் மானாவாரி எனும் நீர்ப்பாசனமற்ற நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டது. இவற்றில் சுமார் 11 ஆயிரம் ஹெக்ரேயர் ( 29000 ஏக்கர்) ஏற்கெனவே கருகி விட்டன.
மேலும் சிறிய நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் செய்கை பண்ணப்பட்ட சுமார் 9 ஆயிரம் ஏக்கரும் நீரின்றிக் கருகியுள்ளன.
இதேவேளை மேட்டு நிலத்தில் சேனைப் பயிர்களாக சுமார் 4000 ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட உப உணவுகளான சோளம், நிலக்கடலை என்பனவும் அழிவடையும் நிலையை எதிர்நோக்கியுள்ளன” என்றார்.
விவசாயிகள் மாற்று விவசாயத் திட்டத்தில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டாலும் தற்போதைய நெருக்கடியான காலகட்டத்தில் உடனடியாக அதனை நடைமுறைக்குக் கொண்டு வர முடியாத நிலையில் தாங்கள் இருப்பதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை குறைந்தது தமது பாதிப்பிலிருந்து அடுத்த ஒரு சில மாதங்களில் மீள்வதற்காக உலருணவையாவது அரசாங்கம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
திருகோணமலை மாவட்டத்தில் மணற்பாங்கான குச்சவெளி, கிண்ணியா மற்றும் வெருகல் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கை ஏற்கெனவே முழுவதுமாகக் கருகி விட்டதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
0 Comments:
Post a Comment