12 Dec 2016

இளைஞர் நாடாளுமன்ற போட்டியிலிருந்து வாபஸ்

SHARE
தேசிய இளைஞர்; சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் இம்மாதம் 18ஆம் திகதி நடைபெறவுள்ள இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டம், மட்டக்களப்புத் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்த இளைஞர் ஒருவர் தான் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
ஏறாவூரைச் சேர்ந்த முஹம்மது அலி முஹம்மது அஸ்லம் என்ற இளைஞனே விலகியுள்ளார்.

இது விடயமாக திங்களன்று ஊடகங்களுக்குத் தெரிவித்த அவர், மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் பிரதேசங்களில் இளைஞர் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை உறுதிப் படுத்தும் வகையில் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், இளைஞர் ஆளுமை தலைமைத்துவப் பண்புகளில் மிக முக்கியமானது விட்டுக் கொடுப்பு. எனவே, பிரதேச இளைஞர் கழகங்களினதும் மாவட்டத்தில் சமூகத்தினதும் ஒற்றுமை கருதி தான் இந்த விட்டுக் கொடுப்பைச் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்படி ஏறாவூர் சார்பாக தற்போது ஒரு இளைஞரே போட்டியிடுகின்றார்.

ஏறாவூரிலிருந்து போட்டியிடுவதற்காக நான்கு பேர் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்திருந்த நிலையில் ஏற்கெனவே இருவரது விண்ணப்பங்கள் தகுதியீனம் காரணமாக நிராகரிக்கப்பட்டிருந்தன. இருவர் தகுதி பெற்று தேர்தல் களத்தில் குதித்தனர். அதில் ஒரு இளைஞர் தற்போது விலகியுள்ளதனால் ஏறாவூரில் தனித்த ஒரு இளைஞரே போட்டியிடுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தம் 45 வேட்பாளர்கள் இளைஞர் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்வதற்காகப் போட்டியிடுகின்றனர் என தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என். நைறூஸ் தெரிவித்தார். 

மட்டக்களப்புத் தொகுதியிலிருந்து 14 பேரும்  கல்குடாத் தொகுதியிலிருந்து 20 பேரும்  பட்டிருப்புத் தொகுதியிலிருந்து 11 பேரும் வேட்பாளர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 

இவர்களில் மட்டக்களப்புத் தொகுதியிலிருந்து வேட்பாளர்களாகத் தெரிவு செய்யப்பட்ட ஒருவர் தற்போது விலகியுள்ளனால் அந்தத் தொகுதியில் தற்போது போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 13 ஆக உள்ளது.


SHARE

Author: verified_user

0 Comments: