12 Dec 2016

இரவு வேளையில் ஏறாவூர் வாவி நீர் ஊருக்குள் உட்புகுந்ததால் மக்கள் அச்சம்

SHARE
மட்டக்களப்பு – ஏறாவூர் வாவி நீர் ஞாயிறு நள்ளிரவு வேளையில் ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தை அண்டியுள்ள ஊரருகு பிரதேசங்களில் உட்புகுந்ததால் வாவிக் கரையோரத்தில் வசிக்கும் மக்களும் மீனவர்களும் அச்சமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
வங்காளக் கடலோடு மட்டக்களப்பு முகத்துவாரம் பகுதியில் இணைந்ததாக ஏறாவூர்  வாவி காணப்படுகின்றது.

இதனால் கடலில் ஏற்பட்ட தளம்பலே இந்த ஏறாவூர் வாவி நீர் பெருக்கெடுத்தமைக்குக் காரணம் என வானிலை அவதான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஞாயிறு நள்ளிரவு ஏறாவூர், ஆறுமுகத்தான்குடியிருப்பு, பங்குடாவெளி, நரிப்புல்தோட்டம், விளாவெட்டுவான் மற்றும் வவுணதீவு போன்ற வாவிக் கரையோரங்களில் வாவி நீர் உட்புகத் தொடங்கியிருந்ததாக மீனவர்களும் கரையோரங்களில் வசிக்கும் மக்களும் தெரிவித்தனர்.

எனினும், இந்த வாவி நீர் பெருக்கெடுப்பு மக்களது குடியிருப்புக்களிலிருந்து மக்களை இடம்பெயரச் செய்யுமளவுக்கு நிலைமை மோசமாகவில்லை என்றும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். 

இது குறித்து நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக பொலிஸாரும் அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, ஞாயிறு இரவும் திங்கள் அதிகாலையும் ஏறாவூர் புன்னைக்குடா, களுவன்கேணி மற்றும் சவுக்கடி போன்ற கடற்கரையோரங்களின் கடல் நீர் மட்டம் வழமையை விட சில மீற்றர்கள் தூரம் கடல் கரையை நோக்கி வந்திருந்ததாக கரையோர மற்றும் ஆழ் கடல் மீனவர்கள் தெரிவித்தனர்.










SHARE

Author: verified_user

0 Comments: