15 Dec 2016

வாசம் உதவும் உறவுகள் அமைப்பினால் உலர் உணவு விநியோகம்

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மண்முனை மேற்குப் பிரதேசம் 30 வருடகாலப் போரினால் மிக அதிகம் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் ஒன்றாகும். இப்பிரதேசத்தில்
உள்ள பின்தங்கிய கிராமங்களில் மங்கிக்கட்டு என்ற கிராமமும் ஒன்றாகும். இங்கு ஏறக்குறைய 100 குடும்பங்கள் தற்போது வாழ்ந்து வருகின்றன.

இக்கிராமத்தில் வாழ்ந்து வந்திருந்த வசதியான மக்களில் அனேகர் போர்க்காலத்தில் இடம் பெயர்ந்து பட்டினத்திலும் வெறு இடங்களிலும் குடியமர்ந்து விட வசதியற்றோர் இக்கிராமத்திலேயே வசித்து வருகின்றனர்.

இக்கிராமத்தில் விநாயகர் முதியோர் சங்கம் முதியோர்களின் நலன்களில் அக்கறையோடு செயற்பட்டு வருகின்றது. அதன் தலைவர் எஸ்.குணரெத்தினத்தின் வேண்டுகோளின் பேரில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் வாசம் உதவும் உறவுகள் நிறுவனம் அக்கிராமத்தில் உள்ள 38 வறிய வயோதிபக் குடும்பங்களுக்கு அரிசி, மா, சீனி பருப்பு உள்ளடங்களான உலர் உணவுப் பொதிகளை வியாழக்கிழமை (15) வழங்கி வைத்துள்ளது. 

இந்நிகழ்வில் வயோhதிபர் சங்கத் தலைவர் எஸ்.குணரெத்தினம் மற்றும் அச்சங்கத்தின் நிர்வாகிகள், வாசம் உதவும் நிறுவனத்தின் தலைவர் வே.பிரபாகரன், வாசம் உதவும் நிறுவனத்தின் ஆலோசகரும் இலங்கை செஞ்சிலுவைச் சங்க மட்டக்களப்பு மாவட்டக் கிளையின் தலைவருமான த.வசந்தராஜா இலங்கை செஞ்சிலுவைச் சங்க உத்தியோகத்தர் க.விஸ்வநாத் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய வாசம் உதவும் நிறுவனத்தின் தலைவர் வே.பிரபாகரன் வாசம் உதவும் நிறுவனமானது தாய் தகப்பனை இழந்து கல்வி கற்க வசதியற்றுள்ள சிறுவர்கள்; கல்வியைத் தொடர்வதற்கும் போரினால் உழைப்பாளியை இழந்து வருமானமற்று அல்லல் படுகின்ற குழும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் மிகவும் தேவையில் உள்ள குடும்பங்களுக்கான வாழ்விடங்களை அமைத்துக் கொடுத்து அவர்களது வீடின்மையைப் போக்குவதற்காகவும் முதியோர்களின் நலன்களை மேம்படுத்துவதற்குமாக செயற்பட்டு வருவதாக கூறினார்.

வாசம் உதவும் நிறுவனத்தின் ஆலோசகரும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டக் கிளைத் தலைவருமான த.வசந்தராஜா இந்நகழ்வில் உரையாற்றுகையில் குடும்பத்துக்காகவும் நாட்டுக்காகவும் உழைத்து தங்களது வாழ்வின் இறுதிக்காலத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பவர்கள்தான் இன்று முதியவர்கள் என அழைக்கப்படுகின்றார்கள். இத்தகையவர்கள் நீண்ட அனுபவத்தையும் அறிவையும் உடையவர்கள். அவர்களுடைய அனுபவமும் அறிவும் இன்னும் குடும்பங்களுக்கும் இந்த நாட்டுக்கும் தேவை. இளையவர்கள் அவர்களிடமிருந்து அதிகம் கற்றுக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். ஆனால் தற்கால இளைஞர்களில் பலர் பெரியவர்களின் அறிவையும் அனுபவத்தையும் உபயோகித்துக் கொள்வதற்கு ஆயத்தமாக இல்லை. உணர்ச்சிகளுக்கு மட்டும் ஆட்பட்டு இறுதியில் தோற்றுப் போபவர்களாக உள்ளனர்.

எனவே தங்களதும் தங்களது சமூகத்தினதும் எதிர்கால நலன்களுக்காக பெரியோரின் அனுபவங்களையும் ஆலோசனைகளையும் சிறிதளவிலேனும் இளைஞர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.








SHARE

Author: verified_user

0 Comments: