15 Dec 2016

மட்டக்களப்பில் பருவ மழை பொய்த்துப் போனதால் நெல்வயல்கள் கருகி நாசம் இதுவரை சுமார் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாதிப்பு உப உணவுப் பயிர்களும் வாட்டம்

SHARE
இம்முறை பருவ மழை பொய்த்துப் போனதால் மட்டக்களப்பு மாவட்டத்தில் செய்கை பண்ணப்பட்ட சுமார் 10 ஆயிரம் ஏக்கர் மானாவாரி நெல்வயல்களும் குறிப்பிடத்தக்க அளவான உப உணவுப் பயிர்களும் கருகி மடிந்து விட்டதாக விவசாய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு வறட்சியால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பாக வியாழக்கிழமை (15) விவரங்களைத் தெரிவித்த மட்டக்களப்பு விவசாயத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் ஆர். கோகுலதாஸன் வழமைக்கு மாறாக வறட்சி நிலைமை நீடிப்பதால் விவசாயிகள் இம்முறை அதிக பாதிப்புக்களைச் சந்தித்து வருகின்றார்கள் என்றார்.

இது குறித்து மேலும் குறிப்பிட்ட கோகுலதாஸன்@ இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மானாவாரி (மழையை நேரடியாக நம்பி மேற்கொள்ளப்படும் பயிர்ச் செய்கை) நெற் செய்கையில் இன்று வரை (15.12.2016) சுமார் 10 வீதம் கருகி விட்டன.

இவ்வாண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகப்படியாக 91 ஆயிரத்து 567 ஏக்கர் (3116 ஹெக்ரேயர்) மானாவாரி நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டது. இவற்றில் 10  வீதமானவை ஏற்கெனவே கருகி விட்டன.

ஏனைய வயல் நிலங்களும் அடுத்த சில நாட்களுக்குள் மழை வீழ்ச்சி கிடைக்காவிட்டால் கருகிப் போகக் கூடிய கவலை தரும் நிலைமை காணப்படுகின்றது.
இதேவேளை நீர்ப்பாசனமல்லாத சேனைப் பயிர்ச் செய்கை மற்றும் உப உணவுப் பயிர்களான சோளம், இறுங்கு, கௌபி, நிலக்கடலை, குரக்கன் போன்ற தானியச் செய்கைகளும் பலத்த பாதிப்பை எதிர் நோக்கியுள்ளன.

இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக 1 இலட்சத்து 55 ஆயிரத்து 391 ஏக்கர் (62886 ஹெக்ரேயர்) நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பெரு நீர்ப்பாசனத்தின் கீழ் 56124 ஏக்கரும் (22713 ஹெக்ரேயர்) சிறு நீர்ப்பாசனத்தின் கீழ் 7700 ஏக்கரும் (3116 ஹெக்ரேயர்) செய்கை பண்ணப்பட்டன.
இதேவேளை, தொடர்ந்து மழை பெய்யாது விட்டால் நீர்ப்பாசனத்தின் மூலம் செய்கை மேற்கொள்ளப்படும் நெற்பயிர்களும் பாதிப்பை எதிர்நோக்கும் என்று விவசாய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

குளங்களிலுள்ள தண்ணீரும் ஏற்கெனவே குறைவடைய ஆரம்பித்து விட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை, கிரான், வந்தாறுமூலை, கரடியனாறு, ஆயித்தியமலை, உன்னிச்சை, கொக்கட்டிச்சோலை, வெல்லாவெளி, பழுகாமம், மண்டூர், ஆகிய பாரிய நெற் செய்கைக் கண்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.




SHARE

Author: verified_user

0 Comments: