சிறுபான்மையினரைச் சீண்டிப் பார்க்கும் பேரின மதவாதிகளின் அடாவடித்தனங்களுக்கு மத்தியிலும் நாட்டின் சட்டத்திற்கும் நல்லொழுக்க விழுமியங்களுக்கும் மதிப்பளித்து இறுதி வரை அமைதி காத்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் முஸ்லிம் மக்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற பதற்றம் மற்றும் அசாதாரண சூழ்நிலை தொடர்பாக அவர் ஞாயிறன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது@
நாட்டு மக்களுக்கு ஒழுக்கத்தை கற்பிக்கவேண்டிய பௌத்த துறவிகள் தவறான முன்னுதாரணமாகச் செயற்பட்டு அநாகரிகத்தையும் அடாவடித்தனத்தையும் வெளிப்படுத்தியபோதும் சிறுபான்மை மக்கள் எப்போதும் இந்த நாட்டின் சட்டத்திற்கு மதிப்பளித்து நடந்துகொள்பவர்கள் என்பதையும் ஒழுக்க விழுமியங்களைக் கட்டிக்காத்து நடப்பவர்கள் என்பதையும் மீண்டும் ஒரு முறை இந்த நாட்டுக்கு நிரூபித்துக் காட்டியுள்ளார்கள்.
சிறுபான்மை மக்கள் கடைப்பிடிக்கும் அமைதியையும் சட்டத்தை மதிக்கும் பண்பையும் குறை மதிப்பீடு செய்து தமிழ் முஸ்லிம் மக்களை எள்ளி நகையாடலாம் பேரின மதவாதிகள் கருதக் கூடாது.
அத்துடன் பொதுபலசேனா அமைப்பினர் மற்றும் கடும்போக்குவாதிகள் தொடர்ச்சியாக சிறுபான்மை மக்களை சீண்டிப்பார்க்கும் விதமான கருத்துக்களை கூறுவதும் நடந்து கொள்வதும் எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்த பதற்றமான சூழ்நிலையில் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்க இறுதி வரை களத்தில் நின்று தமது கடமைய சரிவர நிறைவேற்றிய பாதுகாப்புத் தரப்பினருக்கு எனது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் உள்ளிட்ட முப்படையினரும் பொறுப்புணர்வுடன் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இறுதி வரை சிறப்பாக செயற்பட்டமை கிழக்கு மக்களின் பாராட்டுக்களுக்கும் உரித்தாகியுள்ளது என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
மாகாணத்தின் முதலமைச்சர் என்ற ரீதியில் எமது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் சட்டம் ஒழுங்கை சீர் குலையாமல் பேண வேண்டிய கடமையும் உணர்ந்து செயற்பட்டு வருகின்றேன் என்பதையும் கூறிக் கொள்கினறேன்.
அத்துடன் கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் ஒற்றுமையாகவும் நல்லுறவுடனும் வாழ்ந்து வருவதுடன் அதனை சீர்குலைக்க எவருக்கு இடமளிக்கப்பட மாட்டாது என்பதை மிகத் தெளிவாக தெரிவிக்க வேண்டிய கட்டாயம் எனக்குள்ளது.
அது மாத்திரமன்றி கிழக்கில் எவ்விதமான இனவாத செயற்பாடுகளுக்கும் அனுமதியளிக்க முடியாது என்பதையும் குறிப்பிட விரும்புகின்றேன்.”
0 Comments:
Post a Comment