மட்டக்களப்புக்கும் கொழும்புக்கும் இடையிலான புகையிரதப் போக்குவரத்து ஞாயிற்றுக்கிழமை காலை தொடக்கம் வழமைக்குத் திரும்பி விட்டதாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள புகையிரத நிலையங்களின் அதிபர்கள் தெரிவித்தனர்.
சனிக்கிழமையன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் நுழைய முடியாதவாறு பொலொன்னறுவை மட்டக்களப்பு மாவட்டங்களின் எல்லையில் வழிமறிக்கப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் ஞானசாரர் தலைமையிலான குழுவினர் மட்டக்களப்பு –கொழும்புக்கு இடையிலான புகையிரத சேவையை அசேலபுரவிற்கும் ரிதீதென்னவுக்கும் இடைப்பட்ட பகுதியில் தடைப்படுத்தியிருந்ததாக புகையிரத நிலைய அதிபர்கள் தெரிவித்தனர்.
இதனால் கொழும்பிலிருந்து மட்டக்களப்பை நோக்கிச் சென்ற புகையிரதமும் மட்டக்களப்பிலிருந்து கொழும்பை நோக்கிச் சென்ற புகையிரதமும் தடைப்படுத்தப்பட்ட நிலையில் சேவையை நிறுத்திக் கொண்டன.
வாழைச்சேனையிலிருந்து கொழும்பை நோக்கி சனிக்கிழமை காலை 11.35 இற்குப் புறப்பட்ட புகையிரதம் பாதுகாப்புக் கருதி புணானை புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
கலகமடக்கும் பொலிஸாரும், படையினரும் வழித்துணை வழங்கும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டதன் காரணமாக பொதுபல சேனா அமைப்பினரால் தடுத்து நிறுத்தப்பட்ட புகையிரதம் சனிக்கிழமை இரவு 6.15 மணியளவில் புணானையிலிருந்து விடுவித்துக் கொண்டுவரப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள புகையிரத நிலைய அதிபர்;கள் தெரிவித்தனர்.
கொழும்பிலிருந்து வந்த அந்தப் புகையிரதம் வழமையான நேர அட்டவணைப்படி பிற்பகல் 3 மணிக்கு மட்டக்களப்பை அடைந்திருக்க வேண்டும். ஆயினும், சனிக்கிழமை இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக சுமார் 5 மணித்தியாலங்கள் தாமதித்து இரவு 8 மணிக்கே மட்டக்களப்பை வந்தடைந்தது.
0 Comments:
Post a Comment