மட்டக்களப்பு, ஏறாவூர் புன்னைக்குடா கடற்கரையில் கடந்த 25.11.2016 அன்று பொழுது போக்கிற்காகச் சென்று நீராடிக் கொண்டிருந்த வேளையில் கடல் அலையில் சிக்கி மரணித்த மாணவனின் குடும்பத்தினருக்கு அவர்களது குடும்ப வறுமை கருதி தமது நிறுவனம் வீடொன்றை அமைத்துக் கொடுக்க முன்வந்திருப்பதாக அல் கஸால் அல் அபியத் பௌண்டேசன் நிறுவனத்தின் ஸ்தாபகத் தலைவர் ஏ. செய்யத் இப்றாஹிம் தெரிவித்தார்.
ஏறாவூர் அலிகார் தேசிய கல்லூரியில் உயர்தர - முதலாம் ஆண்டு கலைப் பிரிவில் கற்றுக் கொண்டிருந்த ஏறாவூரைச் சேர்ந்த அல்மஹர்தீன் பர்ஹான் (வயது 17) என்ற மாணவனும் நண்பர்களுமாகச் சென்று கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது மூவர் கடலலையில் சிக்கினர்.
அவர்களில் ஒருவர் உடனடியாகக் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
ஏனைய இரு மாணவர்களும் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர்.
இவர்களில் பர்ஹான் என்ற மாணவனின் குடும்பம் மிக வறுமை நிலையில் தத்தளிப்பதாக சமூக சேவையாளரும் மரண விசாரணை அதிகாரியுமான எம்.எஸ்.எம். நஸீர் மேற்படி நிறுவனத்திடம் தெரியப்படுத்தியிருந்தார்.
இந்த விடயத்தை கவனத்தில் எடுத்துக் கொண்ட தமது நிறுவனம் உடனடியாக குறித்த மாணவனின் குடும்பத்தினருக்கு வீடொன்றை அமைத்துக் கொடுக்க முன்வந்திருப்பதாக ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபாவிடம் அல் கஸால் அல் அபியத் பௌண்டேசன் நிறுவனத்தின் ஸ்தாபகத் தலைவர் ஏ. செய்யத் இப்றாஹிம் உறுதியளித்தார்.
0 Comments:
Post a Comment