
2015ம் ஆண்டு ஜனவரியில் மலர்ந்க நல்லாட்சிக்கு காரணகர்த்தா சிறுபாண்மையினத்தவர் என்பது தெட்டத்தெளிவான அனைவரும் அறிந்த விடயம். ஆனால் தற்போது இந்த நல்லாட்சியினை தீர்மானித்தவர்கள் முன்னைய ஆட்சிகளில் ஒதுக்கப்பட்டதைப் போன்று இவ்வாட்சியிலும் அனைத்து விடயங்களிலும் ஓரம்கட்டப்படுகின்றனர். மத்தியில் இணக்கப்பாட்டு அரசியலும், கிழக்கு மாகாணத்தில் ஆட்சிஅதிகாரத்தின் பங்காளியும், வடக்கு மாகாண சபை ஆட்சியார்களுமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் போக்கு உள்ள நிலையிலும் கூட தமிழ் இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு பிரச்சினை தொடர்கதையாக உள்ளது.
அண்மையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 150 சிற்றூழியர்களுக்கான வெற்றிடம் உள்ளதென்ற செய்தியினை வைத்தியசாலை பணிப்பாளர் அவர்கள் வெளியிட்டிருந்தார். ஆனால் அவ்வெற்றிடங்களுக்கு பொலனறுவையில் இருந்து பகுதி பகுதியாக சிங்கள சிற்றூழியர்கள் 120 பேர் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர். இவ்வெற்றிடங்களுக்கு தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் மட்டக்களப்பிற்கு 150 சிற்றூழியர்களை நியமித்திருந்தால் தமிழ் இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும். பொலனறுவையில் இருந்து இடமாற்றம் செய்துவிட்டு அவ்வெற்றிடங்களுக்கு சிங்களவர்களை புதிதாக நியமனம் செய்வதற்குரிய திட்டமென்றும் கூட இதை சொல்லலாம்.
2015ம் ஆண்டு நல்லாட்சி மலர்ந்ததும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சில் 100 நாள் வேலைத்திட்டத்தினூடாக வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டது. அதிலும் தமிழ் இளைஞர் யுவதிகள் அதிகமாக புறக்கணிக்கப்பட்டனர். 233 வேலைவாய்ப்புக்களில் 208 முஸ்லிம்களும், 20 சிங்களவர்களும், 05 தமிழர்களுக்கு மாத்திரமே வழங்கப்பட்டது. இந்த செயற்றிட்டமானது இனவாதம் பற்றி பேசாத நல்லாட்சியில் நடந்தேறிய செயற்பாடாகும்.
கொரியாவிற்கு சென்று ரூபா. 250000 ஊதியம் பெறக்கூடிய வேலைவாய்ப்புக்கு 2015ம் ஆண்டு 5007 பேர் அனுப்பப்பட்டள்ளனர். அதில் ஐந்து மாவட்டங்களை கொண்ட வடக்கு மாகாணத்திற்கு வவுனியாவில் இருந்து ஒரு நபரும், மட்டக்களப்பில் இருந்து 03 பேரும், அம்பாறை மாவட்டத்தில் இருந்து 35 நபர்களும், திருகோணமலையில் இருந்து 14 நபர்களும் அனுப்பப்பட்டள்ளனர். இதில் எத்தனை முஸ்லிம்கள்? எத்தனை தமிழர்கள்? மற்றும் எத்தனை சிங்களவர்கள் என்பதே கேள்விக்குறியாகும்.
நாடு பூராகவும் வழங்கப்பட்ட விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர் என்ற பதவி வடக்கு கிழக்கில் ஏறழத்தாழ 20 வருடங்களாக எந்தவொரு தமிழருக்கும் முஸ்லீம்களுக்கும் வழங்கப்படவில்லை என்பதும் இங்கு சுட்டிக்காட்டதக்கதொன்றாகும். இவ்வாறு இந்த ஆட்சியிலும் தமிழர்கள் புறந்தள்ளப்பட்டால் இந்நாட்டில் எந்த ஆட்சியில் தமிழருக்கு விடிவு என்பது கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கின்றது.
கிழக்கு மாகாண சபையில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக பதினொரு ஆசனங்களில் இருந்துகொண்டு அதிலும் இரண்டு அமைச்சுக்களை பெற்றுக்கொண்டு ஆட்சியில் பங்காளிகளாக வலம்வருகின்றனர். இவ்வாறானதொரு சந்தர்ப்பம் மீண்டும் வருவதென்பது கேள்விக்குறிதான். காற்றுள்ள போதே தூற்றிக்கொண்டால் தமிழ் இளைஞர் யுவதிகள் இந்த பங்காளியாக இருக்கும் கிழக்கு மாகாண சபைக்கான ஆட்சியின் அடையாளங்களாக மாற்றலாம். ஆகவே இந்த கிழக்கு மாகாண சபைக்கான ஆயுள் வருகின்ற செப்டெம்பர் மாதம் வரைக்கும் உள்ளதென்பதை நினைவில் நிறுத்தி இரண்டு அமைச்சுக்களும் தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு தேவையான அபிலாஷையான வேலைவாய்ப்பினை வழங்குவதற்கு காத்திரமான நடவடிக்கையினை எடுக்க வேண்டும்.
2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழு நிலை விவாத்த்தில் பங்கேற்று உரையாற்றும் 'கொரியா வேலை வாய்ப்பு , நீர் வழங்கல் அதிகார சபை, விவசாய ஆராய்ச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகிய பதவிகளில் எத்தனை தமிழர்கள்? உள்வாங்கப்பட்டுள்ளார்கள் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் குற்றஞ்சாட்டினார்.
2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழு நிலை விவாத்த்தில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார். வியாழேந்திரன் எம் .பி உரையாற்றிக்கொண்டிருந்த போது இடைநடுவில் குறுக்கிட்ட பிரதி வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, நல்லாட்சி அரசாங்கம் இனரீதியான பாரபட்சம் காட்டுவதாக தெரிவித்த கருத்தை வாபஸ் பெறுமாறு வலியுறுத்தினார்.
நல்லாட்சி அரசாங்கம் இனரீதியான பாரபட்சம் காட்டவில்லை எனவும் குறித்த கருத்து முற்றிலும் தவறான ஒன்றெனவும் ஹர்ஷ டி சில்வா கடும் தொனியில் சுட்டிக்காட்டினார். தற்போது என்ன நடைபெறுகின்றது என்ற விடயம் தெரியாவிடின் அதனை தேடி அறிந்துகொள்ளுமாறும் வெளிவிவகார பிரதி அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். இதற்கு பதிலளித்த வியாழேந்திரன் எம்.பி நாடு பூராகவும் வழங்கப்பட்ட விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர் என்ற பதவி வடக்கு கிழக்கில் ஏறழத்தாழ 20 வருடங்களாக எந்தவொரு தமிழருக்கும் முஸ்லீம்களுக்கும் வழங்கப்படவில்லை , நூறு நாள் வேலைத்திட்டத்தில் வழங்கப்பட்ட நீர் வழங்கல் அதிகாரசபை வேலைவாய்ப்பில் நல்லாட்சி அரசாங்கம் இன ரீதியான பாரபட்சம் காட்டுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த காலங்களில் நடைபெற்ற விடயங்களை நல்லாட்சி அரசாங்கம் மாற்றியுள்ளதாகவும் அரசாங்கம் இன ரீதியான பாரபட்சத்துடன் செயற்படுவதாக குற்றஞ்சாட்ட முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் வியாழேந்திரனின் கருத்தை வாபஸ் பெறத் தேவையில்லை என குறிப்பிட்ட பிரதி அவைத் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தொடர்ந்தும் உரையாற்ற அவருக்கு அனுமதி வழங்கினார்.' இவ்வாறு தமிழ் சமூகத்திற்கு தேவையான நீதியான நியாமான பிரச்சினைகளை பேசினால் இனவாதம் என்கின்ற அமைச்சர்கள் வேலைவாய்ப்புகளின் போதும் ஏனைய விடயங்களின் போதும் தமிழ் சமூகத்தை பற்றி சிந்திக்காதது ஏன்? என்கின்ற கேள்விக்கான பதில் என்ன? என்பதே இன்றைய தமிழர்களின் நிலைப்பாடாக உள்ளது. இந்த அமைச்சர்கள் தனித்துவமான பிரதேசத்திற்கோ, அல்லது தனித்துவமான சமூக இன மக்களுக்கோ அன்றி முழு இலங்கைத்திருநாட்டிற்கும் உரித்தான அமைச்சர்கள் ஆக செயற்பட்டால் மாத்திரமே இவ்வாறான பிரச்சினைகளக்கு தீர்வு காணலாம்.
(திலக்ஸ் ரெட்ணம்)
0 Comments:
Post a Comment