20 Nov 2016

கிராம சேவையாளர் வேலியை சேதப்படுத்தியதாக முறைப்பாடு

SHARE
மட்டக்களப்பு வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புனாணை கிழக்கு கிராம சேவகர் பகுதிக்குட்பட்ட உஸன் ஏற்றம் வாலமன்கேணி கிராமத்தில் கிராம சேவையாளரால்
தனது முட்கம்பி வேலி, மற்றும் கொங்கிறீற் கட்டைகள் என்பன வெட்டியும் உடைத்தும் சேதப்படுத்தப்பட்டதாக காணி உரிமையாளர் வாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

வெள்ளிக்கிழமை (நொவெம்பெர் 18, 2016) இடம்பெற்றுள்ள இச்சம்பவம் பற்றிய முறைப்பாடுகள் வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம், மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இதுபற்றி ஜனாதிபதி, பிரதம மந்திரி, பொலிஸ் மா அதிபர், மீள்குடியேற்ற அமைச்சர், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன்;, கிழக்கு மாகாண ஆளுநர். முதலமைச்சர் உள்ளிட்ட இன்னும் பலருக்கு கடிதம் மூலம் அனுப்பவுள்ளதாக காணி உரிமையாளரான எஸ்.எம். மூமினா உம்மா  தெரிவித்தார்.

மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியில் உஸன் ஏற்ற மட்டக்களப்பு கொழும்பு திருகோணமலை முச்சந்தியில் இக்காணி அமைந்துள்ளது.
அமைவிட முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள தனக்குச் சொந்தமான இக்காணியை 1976 ஆம் ஆண்டிலிருந்து தனது தந்தையின் வழிவழியாகப் பராமரித்து வருவதாக அக்காணியின் தற்போதைய உரிமையாளரான மூமினா தெரிவித்தார்.

1990 இடம்பெற்ற யுத்தம் காரணமாக இக் காணியை விட்டு இடம்பெயர நேரிட்டபொழுது படையினர் தம்வசம் காணியைக் கைப்பற்றி முகாம் மற்றும் பாதுகாப்பு அரண் அமைத்து தமது தேவைகளுக்குப் பயன்படுத்தி வந்தனர்.
எனினும், கடந்த 08 வருடங்களுக்கு முன் படையினர் இவ் விடத்தைவிட்டு அகன்ற பின் நாம் எமது காணியில் மீண்டும் குடியேறி பயிர்ச்செய்கை மற்றும் நெற் செய்கையில் ஈடுபட்டு வந்தோம். 

எனது தந்தையாரின் பெயரிலிருந்த இக் காணியினை நான் வாகரை பிரதேச செயலகத்தினூடாக எனக்கும் அதற்கான ஆதாரங்களும் என்னிடம் உள்ளன. 
ஆனால், தற்போது எமது கிராமத்தின் கிராமசேவையாளர் இக் காணியினை விட்டுத்தருமாறும் அதற்காக தமக்கு மாற்றுக் காணியொன்றையும் வழங்குவதாகவும் கூறினார் அதை நாம் மறுத்ததையடுத்து தொடர்ந்தும் எமக்கு அக் கிராமசேவகரினால் பிரச்சினை வந்த வண்ணமே உள்ளது. 

வெள்ளிக்கிழமை எமது காணியைச் சுற்றி அடைத்திருந்த 12 அந்தர் முட்கம்பி வேலி, மற்றும் வேலிக்கு நாட்டப்பட்டிருந்த 83 கொங்கிறீற் கட்டைகள் என்பன சேதமாக்கப்பட்டுள்ளன.

இதனால் சுமார் 1,18000.00 ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதோடு குறித்த கிராம சேவகரின் தொடர்ச்சியான தொந்தரவினால் எமக்கு மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: