உயிரோடு காணாமலாக்கப்பட்டவர்களை அரிதட்டுக்களைக் கொண்டு மண்ணை அகழ்ந்து பார்க்க வேண்டிய துயரம் மிகவும் கொடூரமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதியின் அருகே உள்ள வளவொன்றில் வீடமைப்புப் பணிகள் இடம்பெற்றபோது மனித எலும்பு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட விடயம் தொடர்பாக அவர் வியாழக்கிழமை (03) கருத்துத் தெரிவித்தார்.
மேலும் இதுபற்றித் தெரிவித்த அவர்@
1990 ஆம் ஆண்டு என்பது பயங்கரமும் அநியாயமும் நிறைந்த காலகட்டம். இரண்டாம் கட்ட ஈழப் போர் நடந்தபோது பிறேமதாஸ அவர்கள்தான் ஜனாதிபதியாக இருந்தார்.
1990 ஆம் ஆண்டு கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து 180 பேர் கடத்தப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டிருந்தார்கள். சித்தாண்டியில் 15 பேர் கைது செய்யப்பட்டார்கள், தேவாபுரத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டார்கள் இவர்களில் எவரும் இதுவரை உயிரோடு திரும்பவில்லை.
முறக்கொட்டான்சேனையில் எலும்பு எச்சங்கங்கள் கண்டெடுக்கப்பட்ட வீட்டுக் காரர்களின் உறவினர்கள் 15 பேர் 1990 ஆம் ஆண்டு சித்தாண்டி முருகன் ஆலயத்திலிருந்து கைது செய்யப்பட்டு காணாமலாக்கப்பட்டிருந்தார்கள். அதில் 14 வயது மாணவனும் உள்ளடக்கம்.
அதன் பிறகு அவர்கள் விடுவிக்கப்படவும் இல்லை. தமது வீட்டுக்கு மீளத் திரும்பவே இல்லை.
கைதிகள் விடுபடாத நிலையில் அவர்களை எலும்பு எச்சங்கங்களாக மண்ணுக்குள் அரிதட்டுக் கொண்டு அரித்துப் பார்க்க வேண்டிய துயரம் நிறைந்த நிலையில் நாம் இருக்கின்றோம்.
இவ்வாறான துயரங்களை உண்டாக்கிய சூழ்நிலைகளுக்கு உண்மையில் முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.
குறித்த கடத்தல்கள் கைதுகள், காணமலாக்கப்பட்ட சூழ்நிலைகளில் அதிகாரத்திலிருந்த படை முகாம் அதிகாரிகள் யாரென்பது மக்களுக்குத் தெட்டத் தெளிவாகத் தெரியும்.
கடந்த காலத்து கண்ணீர் மற்றும் இரத்தக் கண்ணீர் காலகட்டத்தில் காணாமலாக்கப்பட்டோருடைய துயரங்களுக்கு ஒத்தடமிட வேண்டும்.” என்றார்.
0 Comments:
Post a Comment