23 Nov 2016

ஒலுவில் மீனவர்களின் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு! பிரதி அமைச்சர் ஹரீஸ் நடவடிக்கை

SHARE
(டிலா)

மீன்பிடி இயந்திரப் படகுகளை கடலுக்குள் கொண்டு செல்வதற்கு தடையாக ஒலுவில் துறைமுகத்தின் நுழைவாயில்
வாக்கப்பட்டுள்ள மண்ணை அகற்றும் பணி விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸின் சொந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் இன்று (22) செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ. பாவா, கே.எம். தௌபீக் உள்ளிட்ட மீனவ சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் அர்ஜுண ரணதுங்க குறித்த பிரதேசத்தில் நிரம்பியுள்ள மண்ணை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கையினை தனது அமைச்சின் மூலம் மேற்கொள்வதாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீசிடம் வாக்குறுதி அளித்திருந்தார்.

இருந்தபோதிலும் அப்பணியினை மேற்கொள்வதற்கு அலுவலக நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டியுள்ளமையினால் காலதாமதம் ஏற்படும் என்பதை அறிந்த பிரதி அமைச்சர் ஹரீஸ், குறித்த பிரச்சினை மீனவர்களின் அன்றாட ஜீவனோபாயத்துடன் தொடர்புடையது என்பதால் தற்காலிக தீர்வாக தனது சொந்த நிதியிலிருந்து மேற்படி மண் அகற்றும் பணியினை மேற்கொண்டு இயந்திர படகுகள் கடலுக்குச் செல்வதற்கான வழியினை ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.  

அமைச்சரிடம் வழங்கப்பட்டுள்ள வாக்குறுதிக்கு அமைவாக இதற்கான நிரந்தர தீர்வினை துறைமுக மற்றும் கப்பல் துறை அமைச்சு மேற்கொள்ளவுள்ளது. 

விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் முயற்சியின் பலனாக மீனவர்களின் இயந்திர படகுகளை தற்காலிகமாக ஒலுவில் துறைமுக பிரதேசத்தில் நங்கூரமிட்டு வைப்பதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் ஆழ்கடல் மீனவர்கள் தமது இயந்திரப் படகுகளை துறைமுக பிரதேசத்தில் தரிக்கச்செய்து மீண்டும் மீன்பிடியினை மேற்கொள்வதற்காக இலகுவாக கடலுக்குச் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


SHARE

Author: verified_user

0 Comments: