மட்டக்களப்பு-காத்தான்குடிப் பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடி நகரில் வியாழக்கிழமை (நொவெம்பெர் 24, 2016) மருந்துக் கடை, பலசரக்குக் கடை மற்றும் தொலைத் தொடர்பு நிலையமும் உடைக்கப்பட்டு திருட்டுப் போயுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பலசரக்குக் கடை உரிமையாளரான காங்கேயனோடையைச் சேர்ந்த சேகுலெப்பை முஹம்மது ஹனீபா (வயது 49), தொலைத் தொடர்பு நிலைய உரிமையாளரான காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதியைச் சேர்ந்த அமீரலி முஹம்மது பைறூஸ் (வயது 42) மற்றும் மருந்துக் கடை உரிமையாளரான முஹம்மத் இப்றாஹிம் முஹம்மத் நியாஸ் (வயது 42) ஆகியோரே தமது கடைகள் உடைக்கப்பட்டு களவு போனது பற்றி பொலிஸில் முறையிட்டுள்ளனர்.
வழமை போன்று புதன்கிழமை இரவு 9 மணியளவில் கடைகளை மூடி விட்டு மறுநாள் வியாழக்கிழமை காலை 7.30 மணியளவில் கடையைத் திறந்து பார்த்தபொழுது கடையின் கூரையைப் பிரித்து உள்நுழைந்து கடையிலிருந்து பொருட்கள் மற்றும் பணம் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் பற்றி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment