16 Oct 2016

இனப்பிரச்சினைத் தீர்வுக்கான முன்னெடுப்பு என்பதை ஒரு இழுத்தடிப்பு விடயமாகவே நான் பார்க்கின்றேன். கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்

SHARE
இனப்பிரச்சினைக்கான தீர்வு வரும் என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற இவ்வேளையிலே என்னுடைய பார்வையிலே இது ஒரு இழுத்தடிப்புக்கான முன்னெடுப்பாகவே  நான் பார்க்கின்றேன் என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஏறாவூர் கோட்டத்தில் ஐந்தாந்தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 74 மாணவர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு ஏறாவூரில் சனிக்கிழமை மாலை (ஒக்ரோபெர் 15, 2016) இடம்பெற்றபோது முதலமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்@ இனப் பிரச்சினைக்கான தீர்வு என்பது இலங்கை வரலாற்றில் தொடர்ந்து தீர்வின்றித் தொடர்ந்து வருகின்ற ஒரு துரோகமாகும்.

இதுவரை காலமும் நடந்த பேச்சு வார்த்தைகளில் எவ்வாறு இழுத்தடிப்புக்கள் இடம்பெற்றதோ அதன் தொடராகவே இப்போதைய நகர்வுகளும் இருக்கின்றன.
அதிகாரப் பரவாக்கல் அதோ வருகிறது இதோ வருகிறது என்று கூறப்படுவதெல்லாம் சிறுபான்மை இனங்களுக்குக் கூறப்படும் ஒரு பூச்சாண்டியைத் தவிர வேறொன்றுமில்லை.

இந்தப் பின்னணியை தொடர்ந்து செய்து கொண்டிருப்பதை மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டிய காலத்தின் தேவை இருக்கின்றது.
அதிகாரப் பகிர்வு என்று பொறிக்கப்பட்ட வெறும் போர்வையை மாத்திரம் மத்திய அரசு மாகாணங்களுக்கு போர்த்தியிருக்கின்றது.

13வது அரசியல் சட்டத் திருத்தத்திலே, குறிப்பிடப்பட்டிருக்கும் விடயம் மத்திய அரசால் மறுக்கப்பட்டு இந்த நாட்டிலே ஒரு அரசியல் யாப்பே கேள்விக் குறியாக்கப்பட்டிருக்கின்றது.

காணி, பொலிஸ், கல்வி அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு மறுக்கப்பட்டிருக்கின்றன.

எழுத்துக்களில் மாத்திரம் அதிகாரப் பரவலாக்கம் நடமாடுகிறது.
13வது அரசியல் சட்டத் திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு மத்திய அரசிற்கு ஒரு நாள் கூட கால அவகாசம் தேவையில்லை. அதற்கொரு அமைதிப் பேச்சுவார்த்தையும் கூடத் தேவையில்லை.

கல்விக் கல்லூரி விடயம் என்பது ஒரு பாரிய சவாலான விடயமாக மாகாணத்திற்கு வந்திருக்கின்றது. கல்வி அமைச்சும், அதன் அமைச்சரும், அதன் செயலாளரும் தன்னிச்சையாக தங்களுடைய விருப்பு வெறுப்புக்கேற்ப இந்த மாகாண ஆசிரியர்களை, இந்த மாகாணத்திலே வெற்றிடங்கள் இருக்கின்றபோது வெளி மாகாணங்களுக்கு அனுப்புகின்ற துரோகச் செயல் இடம்பெற்றுக் கொண்டிருப்பது நிறுத்தப்பட வேண்டும்.

மத்திய அரசின் கல்வி அமைச்சர், செயலாளர் என்ற ஒரே காரணத்திற்காக மாகாணக் கல்வியை முடக்க நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகளை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
கல்விக் கல்லூரிகளில் இருந்து பயிற்சி முடித்து வெளியேறிய ஆசிரியர்கள் இந்த மாகாணத்திற்கே தரப்பட வேண்டிய தேவை இருக்கின்றது. இதற்குப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியமில்லை.

ஆயினும், ஜனாதிபதி, பிரதமர், கல்வி அமைச்சர், அதன் செயலாளர், ஆளுநர் ஆகியோரிடம் மாகாண முதலமைச்சர் பிச்சை கேட்கின்ற அளவுக்கு மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட கல்வி அதிகாரங்களை மத்திய கல்வி அமைச்சு  துஷ்பிரயோகம் செய்து வருகின்றது.

அரசியல் யாப்பில் கொடுபட்டிருக்கின்ற அதிகாரங்கள்; பறித்தெடுக்கப்பட்டிருக்கின்றன. இது ஒரு அநாகரிகமான துரோகச் செயலாகும்.
அரசியல் யாப்பில் மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டிருக்கின்றது என்று நீங்கள் கூறினால் ஏன் ஆசிரியர் நியமனங்களைச் செய்யும் அதிகாரத்தை நீங்கள் பிடுங்கிக் கொள்ள வேண்டும்.

அதிகாரப் பரவலாக்கலில் 95 வீதம் கல்விக்குக் கொடுக்கப்பட்டிருந்த போதிலும் மாகாணத்திலே கல்விக்காக 95 வீத நிதியொதுக்கீடு மத்திய அரசினால் இதுவரை விடுவிக்கப்படவில்லை.

அதுமட்டுமல்ல, மாகாணத்திலுள்ள பதவி வெற்றிடங்களை நிரப்புகின்ற அதிகாரத்தைக் கூட மத்திய அரசு எமக்குத் தரவில்லை.

மாகாணக் கல்வியை கொச்சைப்படுத்துகின்ற விதத்தில் மத்திய அரசினுடைய கல்வி அமைச்சும், அமைச்சரும்;, அமைச்சினுடைய செயலாளரும் நடந்து கொள்கின்ற முறை வன்மையாகக் கண்டிக்கப்படத் தக்கது.” என்றார்.

SHARE

Author: verified_user

0 Comments: