29 Oct 2016

மட்டக்களப்பு, கொழும்பு நெடுஞ்சாலையில் கோர விபத்து

SHARE
மட்டக்களப்பு, கொழும்பு நெடுஞ்சாலையில் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள கொம்மாதுறையில் வீதியருகே இருந்த வீடொன்றுக்குள் சனிக்கிழமை (ஒக்ரோபெர் 29, 2016) அதிகாலை வேளையில் லொறி ஒன்று புகுந்து கோர விபத்து இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் வீடு முற்றாக நொருங்கி சேதமடைந்துள்ளதோடு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மூவரும் லொறிச் சாரதியும் காயமடைந்து உடனடியாக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்த இருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு உடனடியாக மாற்றப்பட்டதாக செங்கலடி வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

கொம்மாதுறை பிரதான வீதியைச் சேர்ந்த சிவகுமார் கபில்ராஜ் (வயது 23) மற்றும் லொறிச் சாரதியான காத்தான்குடியைச் சேர்ந்த எம்.வை.எல்.எம். இஸ்மாயில் (வயது 46) ஆகியோரே படுகாயடைந்தவர்களாகும்.
இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது, மட்டக்களப்பிலுள்ள கடைகளுக்கு பொருட்களை விநியோகிப்பதற்காக கொழும்பிலிருந்து அவற்றை ஏற்றி வந்து கொண்டிருந்த லொறி ஞாயிற்றுக்கிழமை நடுநிசியைத் தாண்டி அதிகாலை 2 மணியளவில் அதன் சில்லொன்று வெடித்ததன் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து வீதி வடிகானைக் கடந்து மின்கம்பத்துடன் மோதி, வீட்டிற்குள் புகுந்துள்ளது.

இவ்வேளையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சகோதரர்கள் மீது வீடு பாரிய சத்தத்துடன் சரிந்து வீழ்ந்துள்ளது. படுகாயமடைந்த தனது சகோதரன் கபில்ராஜ் என்பவரை வீட்டுச் சுவர் மூடியதால் அவரை அகழ்ந்தே வெளியில் எடுத்ததாக காயங்களுக்குள்ளான அவரது சகோதரி தனோஜிகா (வயது 16) தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் வீடு முற்றாகச் சேதமடைந்துள்ளதோடு லொறியின் முகப்புப் பக்கமும் நொருங்கியுள்ளது.

இச்சம்பவம் குறித்து ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.













SHARE

Author: verified_user

0 Comments: