“எமது இனத்தின் மீதான யுத்த வடுக்கள் துடைத்தெறியப்படும் வரை நாம் ஓயாமல் பணி செய்வோம்”. என HINDFOS AID அமைப்பின் தலைவர் அருண்காந்த் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாங்கேணியில் இடம்பெற்ற விதவைகளுக்கான இலவச உடைகள் வழங்கும் நிகழ்வில் கலந்த கொண்டு உடைகளை வழங்கி வைத்து விட்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் HINDFOS AID அமைப்பின் தேசிய ஆலோசகர் ராசையா செல்லையா, அதன் தேசிய பிரதி ஆலோசகர் பொன். சந்திரபோஸ், மட்டகளப்பு இணைப்பாளர் ப. சச்சிதானந்தன் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
“எமது இனம் உலக மரபுரிமை அடையாளம் கொண்டதொரு இனமாகும். நீண்ட நெடிய பாரம்பரியங்களையும் பண்பாடுகளையும் மரபுகளையும் உலகம் மெச்சும் நாகரீகத்தையும், அறிவியலையும் கொண்டிருந்த எமது இனம் இன்று கிழக்கு மாகாணத்தில் அனாதைகள் போல் சிதறுண்டு வறுமையால் வாடி வதங்கி படாத பாடுபட்டு வருகின்றனர். உங்களிடம் உள்ள வறுமையை சில நபர்களோ நிறுவனங்களோ தங்களது நோக்கங்களை நிறைவு செய்துகொள்ள பயன்படுத்திக் கொள்கின்றனர். யுத்தத்திற்கு பின்தான் கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் அதிகமான காணிகளை இழந்து வருகின்றனர் அல்லது வறுமை காரணமாக தமது நிலங்களை அற்ப தொகைகளுக்கு விற்று வருகின்றனர். இங்குள்ள சில தாய்மார்கள் தங்களுடைய பெரும்பகுதி விவசாய காணிகளை வேறொரு சகோதர இனத்தவர்கள் பலவந்தமாக மிரட்டி தம் வசப்படுத்திவிட்டதாகவும் இதற்கு எம்மவர்களே உதவி செய்வதாகவும் கூறினார்கள். இந்த விடயம் சம்பந்தமாக பொலிஸ் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யப்படவில்லை. இவர்களை பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்று சட்ட ரீதியாக அலுவல்களை மேற்கொள்ள உதவி செய்பவர்கள் யாருமே அற்ற நிர்க்கதி நிலைக்கு எமது இனம் உள்ளாக்கப்பட்டுள்ளதை நினைத்து மனம் நொந்து பேசுகின்றேன்.
இந்த கிராமத்தில் ஆண்களைக் காண்பது அரிதாக உள்ளது. இந்த ஆண் துணையற்ற நிலைமையை பயன்படுத்தி தான் பல்வேறு இனக்குழுக்கள் அல்லது நபர்கள் இவர்கள் மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர். நாம் எமது பெண்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் இவர்கள் பல்வேறு சீரழிவுகளுக்கு உட்பட்டு சின்னாபின்னமாகி விடுவார்கள்”. என்றார்.
இந்நிலையில் இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், HINDFOS AID அமைப்பின் கிழக்கு மாகாண இணைப்பாளரும் தேசிய ஆலோசகருமான ராசையா செல்லையா அவர்கள் கூறும்போது. “நாம் அற்ப சொற்ப சலுகைகளுக்காக எங்களுடைய இன, மத அடையாளங்களை விட்டுவிடக் கூடாது. யார் என்ன பொருள் கொடுத்தாலும் நன்றியுடன் பெற்றுக்கொள்ளுங்கள். ஆனால், பொருள் கொடுப்பவர்கள் உங்கள் வாழ்க்கையின் உள்ளே புகுந்து ஏதாவது மாற்றங்களை குறிப்பாக இன மாற்றங்களையோ மத மாற்றங்களையோ செய்ய முற்பட்டால் அவர்களது கோரிக்கைகளை அன்போடு புறந்தள்ளுங்கள்” எனத் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment