தமக்கு வாக்களிக்கப்பட்ட எதனையும் அரச அதிகாரிகள் நிறைவேற்றுவதில்லை எனக் கூறி மட்டக்களப்பு உன்னிச்சைக்குள நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் செவ்வாய்க்கிழமை (செப்ரெம்பெர் 27, 2016) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏற்கெனவே, விவசாய பெரும்போகத்திற்கான கூட்டத்தை நடாத்துவது பற்றிய திகதி (20.09.2016) விவசாயிகளோடு கலந்தாலோசிக்கப்பட்ட பின்னர் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், பின்னர் அந்தத் திகதி அரசியல்வாதிகளின் சௌகரியத்திற்கேற்ப (27.09.2016) மாற்றப்பட்டிருந்து.
இதனைக் கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கபட்ட அதேவேளை தங்களுக்கு அதிகாரிகளால் வழங்கப்படும் வாக்குறுதிகள் எவையும் சரியாக நிறைவேற்றப்படுவதில்லை. அவை காற்றில் விடப்படுகின்றன என்று விவசாயிகள் கோஷமெழுப்பினர்.
விவசாயிகளுக்கான பெரும்போகக் கூட்டம் விவசாயிகளுக்கா, அரசியல்வாதிகளுக்கா, ஜனாதிபதி ஆரம்பித்து வைத்த உரமானியம் மட்டக்களப்பு விவசாயிகளுக்கு எட்டாக்னி, மணல் அகழ்வு தொடர்ந்து இடம்பெறுவதற்குப் பின்னால் உள்ள மாபியா யார்? மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளின் நெல் கொள்வனவு செய்ய ஏற்பாடில்லையா? உன்னிச்சை மக்களுக்கு குடி தண்ணீரில்லையா ? மேய்ச்சல் தரைக்கு நாம் எங்கே போவது? போன்ற பல்வேறு கோரிக்கைகளைக் கேள்விகளாக முன்வைத்த வண்ணம் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
வவுணதீவுப் பிரதேச செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பெரும்போக நெற்செய்கைக்கான கூட்டத்தில் விவசாயிகள் எவரும் கலந்து கொள்ளவில்லை. ஆயினும், அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் அங்கு பிரசன்னமாகியிருந்தபோதும் விவசாய பெரும்போகக் கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொள்ளாமல் பகிஸ்கரித்தனர். தமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக அதிகாரிகளுக்கு 3 நாள் கால அவகாசம் வழங்கப்பட்டதோடு விவசாயிகள் கலைந்து சென்றனர்.
மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். கிரிதரன், நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. ஸ்ரீநேசன், எஸ். யோகேஸ்வரன், மாகாண சபை பிரதித் தவிசாளர் இந்தரகுமார் பிரசன்னா உட்பட மாகாண சபை உறுப்பினர்களும் வருகை தந்திருந்தனர். அவர்களை வழிமறித்து விவசாயிகள் தங்கள் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டினர்.
0 Comments:
Post a Comment