28 Sept 2016

இனவாதத்தை அரசியல் கருவியாக பயன்படுத்துவது எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

SHARE
வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியல் இயக்கங்கள் - கோஷங்கள் தலைதூக்க ஆரம்பித்துள்ளமையானது எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்..எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
வடக்கில் அண்மையில் நடைபெற்ற
எழுக தமிழ்பேரணி தொடர்பில் ஊடகமொன்றுக்கு புதன்கிழமை வழங்கிய செவ்வியிலேயே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்

அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது..

தமிழ் மக்கள் பேரவையினால் அண்மையில் வடக்கில் நடத்தப்பட்ட எழுக தமிழ் பேரணி மற்றும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கடந்த சில காலமாக தெரிவித்து வரும் கருத்துக்கள் என்பன நாட்டில் மீண்டும் இனவாதம் தலைதூக்குவதற்கு காரணமாக அமைந்துள்ளன.

கடந்த 30 வருடமாக புரையோடிப்போயிருந்த கொடிய யுத்தம் நிறைவு செய்யப்பட்ட பின்னர் நாட்டில் சகல இனங்களும் ஒற்றுமையோடு தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கான சூழல் தற்போது உருவாகியுள்ளது. எனினும், இனவாதத்தை தூண்டக் கூடிய செயற்பாடுகள் - கருத்துக்கள்  தலைதூக்கும் பட்சத்தில் எமக்கான வாய்ப்புக்கள் கைநழுவிப் போய்விடும் அபாயம் உருவாகியுள்ளது.  

எனவே, அரசியல் நோக்கங்களுக்காக மீண்டும் இனவாதத்தை தூண்டி; இனங்களுக்கிடையில் கசப்புணர்வை தூண்டும் செயல்களிலிருந்து சகல சமூகங்களும் தவிர்ந்து கொள்ள வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்
வடகிழக்கில் இவ்வாறான செயற்பாடுகள் தலைதூக்குமானால் சிறுபான்மை சமூகம் தொடர்பில் தெற்கில் மிகப் பெரும் எதிர்ப்பலைகளை தோற்றுவிக்கும். குறிப்பாக, தெற்கில் இயங்கும் இனவாத சக்திகள், சிறுபான்மை மக்கள் தொடர்பில் பெரும்பான்மை மக்கள் மத்தியில் இனவாத பிரசாரங்களை மேற்கொள்வதற்கு இவை வாய்ப்பாகவும் அமையும்

அதேபோன்று, முஸ்லிம்கள் சமூகமும் தங்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் மிகவும் கவனமான - நிதானமான போக்கை கையாண்டு பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொள்ள வேண்டும்

இவ்வாறு வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கில் இனவாத சக்திகள் மீண்டும் தலைதூக்கும் பட்சத்தில் அரசாங்கம் முன்னெடுக்கும் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு அது பாதிப்பாக அமையும். அது மட்டுமல்லாது, சிறுபான்மை சமூகம் தமது அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கும் அது தடையாக இருக்கும்

எனவே, அனைவரும் இலங்கையர்கள் என்ற சிந்தித்து பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும். மாறாக ஒவ்வொரு இனமும் தனித்தனியாக செயற்படுமாயின் நாட்டில் அமைதிஒற்றுமை ஒருபோதும் ஏற்படப்போவதில்லை. ஆகவே, எந்த சமூகமாக இருந்தாலும் சரி இனவாதக் கருத்துக்களை வெளியிடுவதிலிருந்த தவிர்ந்து, ஒற்றுமைப்பட்டு செயற்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்


SHARE

Author: verified_user

0 Comments: