28 Sept 2016

வெருகல் கல்லடியில் மலைநீலியம்மன் கோயில் மடப்பள்ளி பௌத்த துறவியால் எரிப்பு

SHARE
திருகோணமலை, வெருகல் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் வரும் கல்லடி கிராமத்திலுள்ள மலைநீலியம்மன் கோயிலின் மடப்பள்ளி அங்குள்ள பௌத்த துறவியொருவரினால் எரிக்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

திங்களன்று (செப்ரெம்பெர் 26, 2016) காலை 10.30 மணியளவில் ஆளரவம் இல்லாது கோயிலின் பின்னால் மறைந்து வந்த காவியுடை தரித்த நபர் கோயிலின் மடப்பள்ளிக்குத் தீவைத்து விட்டு அருகிலுள்ள ரஜமகா விகாரைக்குள் சென்று புகுந்து கொண்டதாக சம்பவத்தை நேரில் கண்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து உடனடியாக கிராம உத்தியோகத்தர் கனகசுந்தரம் ஜெயரூபன் பிரதேச செயலாளரின் கவனத்திற்குக் கொண்டு வந்ததையடுத்து சேருநுவர பொலிஸாரும் விஷேட அதிரடிப்படையினரும் ஸ்தலத்திற்கு விரைந்து பதற்றத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக சேருநுவர ரஜமஹா விகாரையில் ஊழியம் செய்யும் ஒருவரை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தீவைப்பினால் மடப்பள்ளி முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாகவும் மடப்பள்ளியில் வைக்கப்பட்டிருந்த கோயில் பொருட்கள் அனைத்தும்; தீயினால் முற்றாக எரிந்துள்ளதாகவும் கிராம உத்தியோகத்தர் ஜெயரூபன் தெரிவித்தார்.
இந்தக் கோயில் 2009ஆம் ஆண்டும் இனவாத பெரும்பான்மை புத்த துறவியினால் உடைத்து சேதப்படுத்தப்பட்டதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். தற்சமயம் குறித்த கிராமங்களைச் சுற்றி பொலிஸாரும் படையினரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

SHARE

Author: verified_user

0 Comments: