மட்டக்களப்பு சித்தாண்டி சந்தனமடு ஆற்றுப்பகுதியில் காட்டு யானை தாக்கி காயம்பட்ட சிறுமி ஒருவருக்கு வியாழக்கிழமை (செப்ரெம்பெர் 08, 2016) பத்தாயிரம் ரூபாய் பராமரிப்புக்கான உதவிக் கொடுப்பனவுக் காசோலை வழங்கப்பட்டுள்ளதாக சர்வோதய நிறுவனத்தின் சமூகமட்ட விபத்துக்களைக் குறைப்பதற்கான திட்டத்தின் வெளிக்கள உத்தியோகத்தர் ஜோசெப் ஸ்ரீயானி தெரிவித்தார்.
கடந்த 03.09.2016 அன்று மட்டக்களப்பு மாவடிவேம்பு கிராமத்தைச் சேர்ந்த ரவீந்திரன் ஷர்மிலா (வயது 11) அவரது தங்கை ரவீந்திரன் துர்ஷிகா (வயது 9) மற்றும் அவர்களது மாமா ஆகியோர் சைக்கிளில் ஈரலக்குளம் கிராமத்திற்குச் சென்றுவிட்டு சந்தனமடு ஆற்றுப்பகுதி அருகே உள்ள வயல்பாதையூடாக மாவடிவெம்பு கிராமத்தை நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கும் போது காட்டுப்பகுதியிலிருந்து வந்த யானை இவர்களை வழிமறித்துத் தாக்கியதில் ரவீந்திரன் ஷர்மிலா கொல்லப்பட்டிருந்தார்.
இச்சம்பவத்தின்போது காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரவீந்திரன் துர்ஷிகா (வயது 9) சுகமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் அவரது மேலதிக பராமரிப்புக்கான உதவிக் கொடுப்பனவாக பத்தாயிரம் ரூபாய் காசோலை வழங்கப்பட்டுள்ளது.
காசோலை கையளிக்கும் நிகழ்வில் சர்வோதய நிறுவனத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் ஈ.எல். அப்துல் கரீம், ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் யூ. உதயஸ்ரீதர், சர்வோதய நிறுவனத்தின் சமூகமட்ட விபத்துக்களைக் குறைப்பதற்கான திட்டத்தின் திட்ட முகாமையாளர் ரீ.டி. பத்ம கைலைநாதன், வெளிக்கள உத்தியோகத்தர் ஜோசெப் ஸ்ரீயானி ஆகியோரும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment