மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சமயம்
மலசலகூட ஜன்னல் வழியாகப் பாய்ந்து தப்பியோடியிருந்த மட்டக்களப்பு சிறைச்சாலைக் கைதியை தாங்கள் தேடிப் பிடித்து விட்டதாக மட்டக்களப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.
தீவிர தேடுதலின் பின்னர் தப்பியோடித் தலைமறைவாகியிருந்த கைதி ஞாயிறன்று மாலை (செப்ரெம்பெர் 04, 2016) ஏறாவூர் காயர் வீதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது… பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடையதாகக் கூறப்படும் சந்தேக நபரான ஏறாவூர் மிச்நகர் கிராமத்தைச் சேர்ந்த முபாறக்கனி அல்லது முபாறக் கசீர் (வயது 24) என்றழைக்கப்படும் சந்தேக நபர் ஏறாவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இக்கைதி ஞாயிற்றுக் கிழமை (செப்ரெம்பெர் 04, 2016) தனக்கு காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாகவும் உடல்நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறியதற்கிணங்க சிறைச்சாலைப் பொலிஸார் அவரை மட்டக்களப்பு போதனை வைத்தியசாலையின் 11ஆம் வார்ட்டில் ஞாயிற்றுக்கிழமை காலை அனுமதித்துள்ளனர்.
காலை 10.30 மணியளவில் இவர் மலசலகூடம் செல்ல வேண்டும் என்று தனக்கு காவல் நின்ற பொலிஸ் உத்தியோகத்தரிடம் கூறியுள்ளார்.
அதனடிப்படையில் பொலிஸ்காரர் அவரை 2ஆம் மாடியிலுள்ள 11ஆம் வார்ட்டின் மலசலகூடத்திற்கு அழைத்துச் சென்று உள்ளே செல்ல விட்டு விட்டு வெளியே காவலுக்கு நின்றுள்ளார்.
நெடுநேரமாகியும் மலசலகூடத்திற்குள் சென்ற கைதி வெளியே வராததால் சந்தேகம் கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர் அவரை மலசல கூடத்திற்குள் தேடிய பொழுது அவர் அங்கிருந்து ஜன்னல்வழியாகக் குதித்து தப்பிச் சென்றிருப்பது தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடரந்து கைதியைத் தேடி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சுற்றுவட்டாரத்திலும் கைதியின் சொந்த இடமான ஏறாவூரிலும் பொலிஸாரும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களும்ய வலைவிரித்திருந்த வேளையில் அவர் ஏறாவூருக்குத் தப்பி வந்த சமயம் கைது செய்யப்பட்டார்.
பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதோடு கைதியை சிறைச்சாலையில் தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளனர்.
0 Comments:
Post a Comment