கிழக்கு மாகாண மக்களுக்கு இழைக்கப்பட்டுவரும் நீண்டகால புறக்கணிப்புக்கள் பிரச்சினைகளைத் தீர்க்கும் வரை
தானும் தனது மாகாண சபை நிருவாகமும் ஓயப் போவதில்லை என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் சூளுரைத்தார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் வெற்றிக் கிண்ணத்துக்கான கிரிக்கெற் மென்பந்து சுற்றுப்போட்டியின் இறுதி நிகழ்வு ஏறாவூர் அலிகார் மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் ஞாயிறன்று இரவு (செப்ரெம்பெர் 04,2016) இடம்பெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட முதலமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்
இந்த மாவட்டத்தில் தசாப்தங்கள் கடந்து அரசியல்வாதிகள் அதிகாரங்களோடு கோலோச்சியிருக்கின்றார்கள். ஆனாலும், அடிமட்ட மக்களின் பல பிரச்சினைகளை அவர்களால் கண்டு தீர்த்து வைக்க முடியாமற்போனது துரதிருஷ்டமேயாகும்.
அவர்கள் என்னதான் செய்திருக்கிறீர்கள் என்ற கேள்வி எழுகிறது.
நிதியைத் திரட்டிக் கொண்டு வந்து பொதுமக்களுக்கான அபிவிருத்திகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்ற யுக்தி அரசியல் தலைமைகளுக்கு தெரிந்திருக்க வேண்டும்.
துடிப்போடு மக்கள் சேவை செய்வதற்கான ஆளுமை இருக்க வேண்டும்.
வெறுமனே உணர்ச்சி வசமான ஊடக அறிக்கைகள் வெளியிட்டு மக்களை உசுப்பேற்றத் தேவையில்லை. பறைசாற்றித் திரியாமல் எல்லா விடயங்களிலும் இராஜதந்திரம் தேவை. பறைசாற்றி மக்களை உசுப்பேற்றி விடுவதற்காக மக்கள் எம்மை அரசியல் தலைமைகளாகத் தேர்ந்தெடுக்கவுமில்லை.
மக்களை ஏமாற்றி தங்களது குடும்பம் மாத்திரம் வாழ்கின்ற அரசியலை நிறுத்தி விட்டு உண்மையான கனவான் அரசியலில் ஈடுபட்டால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அத்தனை பிரச்சினைனகளுக்கும் தீர்வைக் கண்டு விட சந்தர்ப்பம் இருக்கின்றது.
மத்திய அரசிலே கோடிக்கணக்கான நிதி இருக்கிறது. எவ்வாறேனும் ஆர்வமிருந்தால் அபிவிருத்திக்கான நிதியைக் தேடிப்பெற்று மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அவ்வளவு சிரமமிருக்காது.
ஏறாவூர் மற்றும் ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலாளர் பிரிவுகளைப் பொறுத்தவரை நீர்வடிகாலமைப்பு, மற்றும் திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவம் ஆகிய இவ்விரண்டு திட்டங்களும் இந்தப் பிரதேச மக்களுக்கு மிக முக்கியமானவை.
மாரிகாலங்களில் வெள்ளப்பெருக்கு, வீடுகளிலும் வீதிகளிலும் நீர் நிரம்பி வழியும் காட்சிகள். இதனை முறையான விஞ்ஞானப் பொறிமுறைத் தயாரிப்புடன் செயற்படுத்த திட்டம் வகுத்துள்ளோம்.
1350 கோடி ரூபாவிலே இந்தத் திட்டம் இந்த வருடத்திற்குள் அமுலாகும்.
நிறைவாக ஒரு செயற்திட்டத்தை முடிப்பதற்கு நிதி ஏற்பாடுகள் இல்லாமல் அடிக்கல் நாட்டுவதற்கு நாம் சென்றதில்லை.
மாகாணத்திலே 5000 பட்டதாரிகள் தொழிலின்றி இருக்கின்றார்கள். அடுத்த மாதத்திற்குள் 350 பட்டதாரிகளுக்கு மாகாண சபை வேலைவாய்ப்பை வழங்கவுள்ளது.
கிழக்கு மாகாணத்திலே கணித ஆசிரியர்களாக 434 பேருக்கு வெற்றிடமிருந்தும் 66 கணிதப் பட்டதாரிகள் தான் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள்.
அரச பணியிடங்களில் கிழக்கு மாகாணத்தில் 1134 வெற்றிடங்கள் உள்ளன. 1573 பட்டதாரிகள் இதற்கு விண்ணப்பித்திருக்கின்றார்கள். ஆனால் அவர்களில் 390 பேர் மாத்திரம்தான் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றார்கள். இது பெரிதொரு பாரபட்சம்.
இது விடயமாக ஜனாதிபதி பிரதம மந்திரி மற்றும் அமைச்சர்களிடம் பிரஸ்தாபித்திருக்கின்றோம். கிழக்கு மகாண மக்களுக்கு இழைக்கப்பட்டுவரும் நீண்டகால புறக்கணிப்புக்கள் பிரச்சினைகளைத் தீர்க்கும் வரை நாம் ஓய மாட்டோம்.”
கிழக்கு மாகாணப் பட்டதாரிகள் மாகாணத்துக்கு வெளியே தூக்கி வீசப்பட்டபோது அவர்களை நாங்கள் பெரு முயற்சி எடுத்து மகாணத்துக்குள் உள்வாங்கினோம்.
இம்முறை அவ்வாறு நிகழாமல் கிழக்கு மாகாணத்திலிருந்து விண்ணப்பித்த கல்விக் கல்லூரி மாணவர்கள் கிழக்கு மாகாணத்திலேயே தங்களது பயிற்சியை முடிக்க வேண்டும் என்று நாங்கள் போராடிக் கொண்டிருக்கின்றோம்.” என்றார்.
0 Comments:
Post a Comment