28 Sept 2016

நெல் அறுபடை ஆரம்பித்ததும் நெல்லினை வாங்குவதற்குரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

SHARE
நெல் அறுபடை ஆரம்பித்ததும் நெல்லினை வாங்குவதற்குரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருலட்சத்தி எண்பதினாயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் இருக்கின்றது.
இவற்றில் ஒருலட்சத்து முப்பத்தையாயிரத்திற்கு மேற்பட்ட நிலங்களில் பெரும்போக நெற்செய்கையில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர். இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் நெல்லில் 10வீதமானதை உணவிற்கும், 5வீதமானதை விதைநெல்லுக்கும், 5வீதமானதை வீட்டிலும் வைக்கின்றனர்.

80வீதமான நெல்லினை கடன் பெற்று விவசாயம் செய்ததினாலும், நகைகளை அடகு வைத்ததினால் அவற்றை மீள பெறுவதற்கும், உரம், கிருமிநாசினி போன்றவற்றை கொள்வனவு செய்த கடனை மீளளிப்பதற்காகவும் உற்பத்தி செய்யப்பட்ட நெல்லினை விற்பனை செய்கின்றனர்.  என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்றுவருகின்ற விவசாய செய்கைக்கான ஆரம்பகூட்டம் பற்றி கருத்து தெரிவிக்கையிலே இதனை தெரிவித்தார்.

மேலும் மாகாணசபை உறுப்பினர் இது தொடர்பில் குறிப்பிடுகையில்,
மேலும் 95வீதமான விவசாயிகள் அறுவடை இயந்திரங்களினால் அறுவடை செய்வதினாலும் நெல் ஈரத்தன்மை கொண்டதாகவும், காயவைப்பதற்கு 75வீதமானவர்களுக்கு இடவசதி இல்லாததினாலும் அரை விலைக்கு நெல்லை விற்கின்ற நிலை கடந்த 10வருடங்களாக நடைபெற்று வருகின்றது.

நெல்லினை கொள்வனவு செய்கின்ற அரசாங்கமும் நெல்ஆறுவடை செய்கின்ற காலப்பகுதியில் கொள்வனவு செய்யாததினால் ஒரு சில முதலாளிகள், வியாபாரிகள் தனி நபர்களின் விண்ணப்படிவத்தினை பெற்று அவர்கள் நெல் சந்தைப்படுத்தல் திணைக்களத்திற்கு கொடுக்க கூடிய சூழல் இருக்கின்றது. இவ்வாறான செயற்பாடுகளினால் எல்லா விவசாயிகளும் விரக்தி அடைந்த நிலையில் விவசாயத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறான செயற்பாடுகளில் மாற்றம் ஏற்படவேண்டும் என்பதற்காக தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்தும் மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும், கிழக்கு மாகாணத்தில் விவசாய அமைச்சர் இருந்தும் நெல்அறுவடை நேரத்தில் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என மக்கள் தம்மிடம் முறையிட்டதாகவும்.


இதனால் விவசாயிகளை பாதுகாக்கும் பொருட்டு விவசாயிகளிடமிருந்து நெல்அறுவடை நாளிலிருந்து மத்திய அரசுயுடன் பேசி நெல்லினை கொள்வனவு செய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதேவேளை கடந்த வருடங்களில் கொள்வனவு செய்யப்பட்டு களஞ்சியசாலைகளில் வைக்கப்பட்டுள்ள நெல்லினை அங்கிருந்து வெளியேற்றி புதிய நெல்லினை கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்தி வைக்ககூடிய நிலையில் களஞ்சியசாலைகளை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது 2017 புதிய ஆண்டில் இருந்து நடைமுறைக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுப்பதாகவும், உரிய அமைச்சுகளுக்கு அறிவித்தல் வழங்கி உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
SHARE

Author: verified_user

0 Comments: