22 Jul 2016

கல்வியறிவின் ஊடாகவே உரிமைகளையும் அபிவிருத்தியையும் அடைந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்-பிரசன்னா இந்திரகுமார்

SHARE
கல்வியறிவின் ஊடாகவே தமிழ் பேசும் சமூகங்கள் பேரினவாதத்திடம் பறிகொடுத்த உரிமைகளையும் அபிவிருத்திகளையும்
அடைந்து கொள்ள முடியும் என  கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று 1 கல்வி வலயத்திலுள்ள ஐயன்கேணி தமிழ் வித்தியாலயத்தில் மாடிக்கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு பாடசாலை அதிபர் எம். மனோகரன் தலைமையில் வெள்ளிக்கிழமை (ஜுலை 22, 2016) இடம்பெற்றபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய பிரசன்னா, ஒரு கல்விக் கூடத்தை அமைப்பது ஒரு சிறைக் கூடத்தை மூடுவதற்குச் சமனானது என்று ஒரு பொன்மொழியுண்டு.

புரட்சியாளர்கள் கல்வியின் அவசியத்தை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.
தூக்குக் கயிற்றை முத்தமிடும் வரை கல்விக்காக தம்மை அர்ப்பணித்த மகான்கள் பட்டியலிலே நமது தமிழர் விடுதலைப் போராட்டத்தின் முன்னோடியான குட்டிமணியும் உள்ளடங்குவார்.

தனக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப் பட்டபோது தனது உடலை யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்களின் ஆய்வுக்காக பயன்படுத்திக் கொள்ளுமாறும், தன்னுடைய கண்களை பார்வையற்ற மாணவர்களுக்கு அளிக்குமாறும் அவர் தியாகத்தை வெளிக்காட்டியிருந்தார். அவரின் 33 வது படுகொலை நினைவாண்டிலே நாம் கல்விக்காக பல வேலலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

விடுதலைப் பேராட்டத்தின் ஆரம்பமே கல்விதான். அதன் ஆரம்பப் போராளிகள் கல்விக்காகவே தங்களை அர்ப்பணித்தார்கள்.

ஏறாவூர் ஐயன்கேணிப் பிரதேசம் தமிழ் முஸ்லிம் மக்கள் இணைந்து வாழ்கின்ற ஒரு பகுதி. அதேவேளை இப்படியான எல்லைப் புறக் கிராமங்கள்தான் திட்டமிட்ட இனக்கலவரங்களாலும், போரினாலும் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளாக உள்ளன. இயற்கை இடர்களும் இந்த மக்களுக்கு அழிவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. வருடாவருடம் ஏற்படும் பெருமழை வெள்ளத்தின் காரணமாக ஐயன்கேணிப் பிரதேசம் மூழ்கிவிடுவதால் மக்கள் துயரப்பட வேண்டியுள்ளது.

இங்கு வாழும் மக்கள் இப்பொழுதுதான் தமது தொழில்களைச் செய்து நாளாந்த வாழ்வாதாரத்தைத் தேடிக்கொள்கின்றார்கள்.

அதேவேளை, தமது வருமானத்தை பிரயோசனமான வழிகளில் செலவு செய்வதற்கு தமிழ் சமூகம் சிந்திக்க வேண்டும்.

குறிப்பாக கூடுதலாக கல்விக்காக முதலீடு செய்வதற்கு தமிழ் சமூகம் முன்வரவேண்டும்.

யுத்தப் பாதிப்புக்களில் முதலாவது இடத்திற்கு வந்துள்ள தமிழ் சமூகந்தான் இப்பொழுது குடிபோதையிலும் முன்னிற்கிறது.

யாழ்ப்பாணம் முதலாவது இடத்திலும் மட்டக்களப்பு மூன்றாவது இடத்திலும் நிற்கிறது. சில வருடங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்டம் வறுமையில் முதலாவது இடத்தில் இருந்தது.

இந்தப் பிரதேச மக்களும் தாம் கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தை குடிபோதையில் செலவிடாமல் தமது பிள்ளைகளின் கல்விக்காக செலவிட வேண்டும்.

நமது நாட்டில் உள்ள இலவசக் கல்வி என்பது ஏழை மாணவர்களுக்கு கிடைத்த ஒரு அருட்கொடையாகும். இதனை பெற்றோரும் மாணவர்களும் சரியாகப் பயன்படுத்தி அறிவில் சிறந்த சமூகமாக இந்த நாட்டை ஆள்வதற்கு முன்வரவேண்டும். ” என்றார்.




SHARE

Author: verified_user

0 Comments: