28 Jun 2016

அரியநேத்திரனிடம் அரசியல்படுகொலை பற்றி விசாரணை

SHARE
தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  பா. அரியநேத்திரன்  திங்கட்கிழமை (ஜுன் 27, 2016) குற்றப்புலனாய்வு துறையினரால் கொழும்புக்கு அழைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ளார்

கொழும்பு குற்றப்புலனாய்வுத் தலைமயகத்தில் நடைபெற்ற இந்த விசாரணையில் 10 வருடங்களுக்கு முன்பு மட்டக்களப்பு  புறநகர்ப் பகுதியில் இடம் பெற்ற அரசியல் படுகொலைச் சம்பவமொன்று தொடர்பாக வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

2004ம் ஆண்டு ஏப்ரல் 2ம் திகதி நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து   தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் தெரிவாகியிருந்த கிங்ஸிலி இராசநாயகம் படுகொலை தொடர்பான விசாரணைக்காகவே தான்  அழைக்கப்பட்டிருந்ததாக  நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பா. அரியநேத்திரன்  தெரிவித்தார்.
அக்காலப் பகுதியில் விடுதலைப்புலிகளின் பிராந்திய அரசியல் துறைப் பொறுப்பாளராகவிருந்த கௌசல்யனின் உறவு முறைபற்றி தன்னிடம் கேட்கப்பட்டதாகவும்  அவர்  கூறினார்.

2004 ம் ஆண்டு தொடக்கம் 2015ம் ஆண்டு வரை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக  பதவி வகித்த அரியநேத்திரன் 2004 ம் ஆண்டு தேர்தலில் விருப்பு வாக்குகள் அடிப்படையில் தெரிவாகியிருக்கவில்லை.
விருப்பு வாக்கு அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் நான்கு  நாடாளுமன்ற உறுப்பினர்களில்  ஒருவராக கிங்ஸிலி இராசநாயகம் தெரிவாகியிருந்த போதிலும்  அவர் பதவிப் பிரமாணம் செய்யாமலே  ஒரு சில நாட்களில் பதவியிலிருந்து இராஜினாமா செய்து கொண்டார்.

விடுதலைப்புலிகளின்  அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாகவே கிங்ஸ்லி இராசநாயகம் இராஜினாமா செய்து கொண்டதாக அவ்வேளையில் அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டது.

கிங்ஸ்லி இராசநாயகம் பதவியை இராஜினாமாச் செய்து கொண்டடதையடுத்து அந்த  வெற்றிடத்திற்கு விருப்பு வாக்குகள் அடிப்படையில் அடுத்த இடத்திலிருந்த பா. அரியநேத்திரன்  நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம்  செய்து கொண்டார்.

கிங்ஸ்லி இராசநாயகம்  பதவியை இராஜினாமா செய்து  ஆறு  மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் ஒக்டோபர் 19ம் திகதி  மட்டக்களப்பின் புறநகர் பகுதியிலுள்ள அவரது காணியை பார்வையிட சென்றிருந்த வேளை அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த கொலைக்கு விடுதலைப்புலிகள் பொறுப்பு என ஏற்கனவே அவரது குடும்பத்தினரால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

2004ற்கு முற்பட்ட காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்புடன்  நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்ததாக கூறப்படும் கிங்ஸ்லி இராசநாயகம் விடுதலைப் புலிகளினால் இயக்ககப்பட்ட தமிழர் புனர்வாழ்வு கழகத்திலும் பொறுப்பான பதவிகளை வகித்திருந்தார்.

கிழக்கு மாகாணத்தில் 2004ம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் ஏற்பட்ட பிளவின் பின்னர் கிங்ஸ்லி இராசநாயகம்  கொண்டிருந்த  நிலைப்பாடு காரணமாக அந்த அமைப்பினால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகக்; கூறப்படுகின்றது.

SHARE

Author: verified_user

0 Comments: