19 May 2016

மகாஜனா பெண் பிள்ளைகள் இந்துவில் கற்க ஏற்பாடு

SHARE
எதிர்கால சந்ததியை நாங்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையைக் கொண்டே மகாஜனாக் கல்லூரியின் பெண் மாணவிகளை இந்துக் கல்லூரியின் தொழில் நுட்பப்பிரிவில் கற்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கோ.கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு முனைக்காடு கண்ணகை அம்பாள் ஆலயத்தில் முனைக்காடு இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் நேற்று நடைபெற்ற கண்ணகி கலை விழா சிறப்பு நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
எங்களது மாணவர்கள் தற்போது மிகவும் விழிப்புடன் கல்வி கற்கிறார்கள். கடந்த ஆண்டைவிடவும் இந்த வருடத்திலே சிறந்த பெறுபேறுகளைப் பெற்றிருக்கிறார்கள்.
பொறியியல் துறைக்கும், மருத்துவ பீடத்துக்கும் அதிகமான மாணவர்கள் செல்வதற்குத் தயாராக இருக்கிறார்கள். அதேபோல் தற்போது புதிதாக தொழில் நுட்பப்பிரிவு ஆரம்பமாகியிருக்கிறது. மட்டக்களப்பில் இந்துக் கல்லூரியில் அதற்கான தொழில்நுட்ப பீடம் அமைக்கப்பட்டிருக்கிறது.
இன்று இந்துக் கல்லூரியில் தொழில்நுட்ப பீடம் இருக்கிறது. ஆனால் பெண் பிள்ளைகள் அங்கு கற்க முடியாத நிலை இருந்தது. மகாஜனாக் கல்லூரி ஒரு பெண்கள் பாடசாலையாகவும், இந்துக் கல்லூரி ஆண்கள் பாடசாலையாகவும் இருந்தது. ஆனால் மகாஜனாக் கல்லூரியில் தொழில் நுட்பப்பிரிவில் கற்கக் கூடிய வசதிகள் இல்லாமல் இருந்தது.
என்னிடம் மட்டக்களப்பு நகரத்தை ஒட்டிய பெண் மாணவிகளின் பல பெற்றோர்கள் முறையிட்டார்கள். மட்டக்களப்பில் தொழில்நுட்பக்கல்வி கற்க வேண்டுமாக இருந்தால் எங்களுடைய பிள்ளைகள் களுதாவளைக்குச் செல்ல வேண்டும் என்றும். இந்துக் கல்லூரியில் எங்கள் பெண் பிள்ளைகளைத் தொழில் நுட்பப்பிரிவில் சேர்க்க வில்லை என்று தெரிவித்தார்கள்.
அதன் பின்னர் அதற்கான நடவடிக்கை எடுத்து, கிழக்கு மாகாணப் பணியகம், மாகாணக் கல்வி அமைச்சர், மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளருடன் பேசி, மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் தொழில்நுட்பப்பிரிவுக்கு மாத்திரம் பெண் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான அனுமதியைப் பெற்றுக் கொடுத்திருக்கிறேன்.
ஆனால் இன்று எனக்கு எதிராகப் பல பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. மகாஜனாக் கல்லூரியில் தொழில் நுட்ப பீடம் இருப்பதாகவும் அங்கிருக்கும் மாணவிகளை நாங்கள் இந்துக் கல்லூரிக்கு மாற்ற முயற்சிப்பதாகவும் கூறுகின்றார்கள்.
உண்மை அதுவல்ல. மகாஜனாக் கல்லூரில் தொழில்நுட்பப்பாடம் கற்பிக்கக்கூடிய சிறிய ஆய்வுகூடம் இருக்கிறது. பயிற்சி செய்யக்கூடிய தொழில் நுட்ப பீடம் இல்லை.
இந்துக்கல்லூரியில் இருக்கிறது. மகாஜனாக் கல்லூரியில் கற்கும் மாணவிகள் தங்களது பதிவை அங்கேயே வைத்துக் கொண்டு இந்துக் கல்லூரியில் பயிற்சிக் கற்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டிருக்கிறேன்.
அதே நேரத்தில் பிரபல பெண்கள் பாடசாலைகளான வின்சற் உயர்தரக் கல்லூரி, சிசிலியா பெண்கள் கல்லூரி போன்ற பாடசாலைகளில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவிகளை எங்கே கற்பிப்பது நாங்கள் களுதாவளைக்கா, காத்தான்குடிக்கா, ஏறாவூருக்கா அனுப்புவது என்று கேட்டார்கள்.
எனவே மகாஜகாக்கல்லூரியை அழித்துவிடவுமில்லை, அதன் மரியாதையைக் கெடுத்துவிடவுமில்லை. பாடசாலையை விட எமது எதிர்கால சந்ததியை நாங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
எமது பெண் மாணவிகள் தொழில் நுட்பப்பிரிவில் கற்க வேண்டுமாக இருந்தால் அவர்களுக்குரிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
கடந்த ஆண்டிலே பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட தொழில் நுட்பப்பிரிவு மாணவர்கள் 3 வருடத்தில் பட்டதாரியாக வெளியேறும் போது அவர்களுக்கான தொழில் வாய்ப்பு உறுதிப்படுத்தப்பட்டிருக்கும்.
எமது மாவட்டத்திலே தொழில்நுட்பப்பிரிவை ஊக்கப்படுத்தாது விட்டால் அவர்களுடைய எதிர்காலமும் தமிழருடைய எதிர்காலமும் பாதிக்கப்படும் என்பதனாலேயே இந்துக் கல்லூரியின் தொழில்நுட்பப்பிரிவில் பெண் பிள்ளைகளையும் சேர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.
அதனை நிறைவேற்றியிருக்கிறேன், உங்கள் பிரதேசத்திலும் உயர்தரத்தில் தொழில் நுட்பப்பிரிவில் கற்க விரும்பினால் இந்துக் கல்லூரியில் கற்கலாம் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
SHARE

Author: verified_user

0 Comments: