கிழக்கு மாகாணம் இன்னமும் ஒரு அதிகார அடக்கு முறையில்தான் இருக்கின்றது. இங்கு பேரினவாத அதிகார மனப்பான்மையுடன் தான் பலர் நடந்து கொள்கின்றார்கள். இதனால் இன ஒற்றுமையைச் சிதைப்பதற்கும் இந்த அதிகார மமதை மனப்பான்மை தூண்டுகிறது என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
மீள் குடியேறிய திருகோணமலை சம்பூர் மாணவர்களின் நலன்கருதி 20 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட விஞ்ஞான ஆய்வு கூடம் மற்றும் கணினிப் பிரிவு (Science Lab and Computer Unit) என்பவை வெள்ளிக்கிழமை 20.05.2015 திறந்து வைக்கப்பட்டு கையளிக்கப்பட்டன.
அந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.
தொடரந்து அங்கு உரையாற்றிய அவர், சம்பூர் மக்களின் துயரங்களைத் துடைக்க வேண்டிய பொறுப்பை கிழக்கு மாகாண சபை சுமந்து நிற்கின்றது. அந்தப் பொறுப்பை எனது தலைமையிலான கிழக்கு மாகாண சபை நிச்சமாக எமது ஆட்சிக் காலத்தில் செய்து முடிக்கும்.
பாதிக்கப்பட்ட மக்களை சொந்தக் காலில் நிற்கச் செயது, அவர்களது வாழ்வாதாரத்தை ஒட்டுமொத்தமாக உயர்த்தி சம்பூரை ஒரு நகரமாக மாற்றும் பொறுப்பையும் நாம் செய்து காட்டுவோம். இதற்கெல்லாம் மாகாண சபைக்கான அதிகாரப் பகிர்வு கிடைக்கப்பெறுவது மிக முக்கியம்.
கிழக்கு மகாணம் இப்பொழுதும் மத்திய அரசின் பேரினவாத அதிகார மமதையிலிருந்து விடுபட வேண்டியிருக்கின்றது. 2 இலட்சம் பேர் கிழக்கு மாகாணத்தில் வேலைவாய்ப்பின்றி தினமும் எங்கோ ஓர் மூலையில் போராட்டத்தை நடத்திக் கொண்டிருப்பது வாடிக்கையாகி விட்டது. ஆயிரம் பட்டதாரிகள் கிழக்கு மாகாண சபையிலுள்ள எங்களை எந்நாளும் சூழ்ந்து கொள்கின்றார்கள், இதனை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.
இதனை முடிவுக்குக் கொண்டு வருவதாக இருந்தால் எங்களது மாகாண சபைக்கு முன்னததாகவே அரசியலமைப்பில் குறித்தொதுக்கப்பட்ட அதிகாரங்களும் நிதியும் அதன்படி பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
எங்கே என்ன செய்ய வேண்டும் என்பதை நாங்கள் அறிந்திருக்கின்றோம் ஆனால் அரசியலமைப்பில் வழங்கப்பட்ட அதிகாரங்களை எமக்குத் தராமல் மத்திய அரசு கையகப்படுத்திக் கொண்டுள்ளதால் எம்மால் எமது பிராந்தியத்தில் காணப்படுகின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுடியாமல் இருக்கின்றது.
ஆளுநர் அதிகாரத்தைப் பயன்படுத்தி மத்திய அரசு மாகாணங்களை அடக்கி ஆள்கிறது.
95 வீதமான பாடசாலைகள் மாகாண நிரவாகத்தின் கீழிருந்தும் நிதியை மத்திய அரசே கையாள்கிறது.
குறைந்தபட்சம் கல்விக்காக 8 வீதம் கூட மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்படுவதில்லை. கிழக்கு மாகாணம் கல்வியிலே எட்டாவது இடத்திற்குச் சென்றிருக்கின்றது. இது கவலையளிக்கும் விடயம்.
இதனை மாற்றாதவரை எதுவும் நடைபெறாது. சமாதானத்தையும் அடையப் பெற முடியாது.இந்த நாட்டில் இனியொரு புரட்சி வெடிக்குமாக இருந்தால் அது கிழக்கு மாகாணத்திலிருந்துதான் அதுவும் தொழிலில்லாத இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்டவர்களால்தான் இடம்பெறுமென்பதை இந்த நாட்டுக்கு நான் சொல்லி வைக்க விரும்புகின்றேன். அதிகாரப் பகிர்வு வருகின்ற போது நாங்கள் எங்களது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment