மதுப்பாவினைக்கு அடிமையாகி பாதிக்கப்பட்டு உடல் உள ஆரோக்கியத்தை இழந்திருந்த நிலையில் புனர்வாழ்வளிக்கப்பட்ட மதுப் பிரியர்களுக்கும் அவர் தம் குடும்பத்தினருக்கும் தொழில்வழிப் புனர்வாழ்வளிப்பதற்கென சுமார் 64 இலட்ச ரூபாய் செலவில் தொழிற்பயிற்சிக் கூடம் ஒன்று நிருமாணிக்கப்படவுள்ளதாக
மட்டக்களப்பு மாவடிவேம்பில் “ஆரோக்கியப் பாதை” என்ற பெயரில் இயங்கிவரும் உளநல புனர்வாழ்வு நிலையத்தின் பொறுப்பு வைத்தியரும் சிரேஷ்ட உளநல மருத்துவருமான பி. ஜுடி ரமேஷ் ஜெயக்குமார் தெரிவித்தார்.
அவுஸ்திரேலிய அரசின் நிதி அனுசரணையோடு நவீன வசதிகளுடன் ஒரே நேரத்தில் சுமார் 50 இற்கு மேற்பட்டோர் தொழிற்பயிற்சி பெறுவதற்குத் தோதாக இந்த தொழிற் பயிற்சி நிலையம் அமைக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கான நிதியளிப்பு இடம்பெற்றுவிட்டதாகவும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2005 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் ஒரேயொரு அரச புனர்வாழ்வு மையமான இந்த மருத்துவமனையில் மதுப் பாவினைக்கு அடிமையாகி உடல் உள ரீதியில் பாதிக்கப்பட்ட ஆண், பெண் இருபாலாரும் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிகிச்சை பெற்று வெளியேறுவோர் தங்களது வாழ்வாதாரத்தை மேற்கொள்வதற்காக தொழிற்பயிற்சிகளையும் பெற புதிய தொழிற்பயிற்சி நிலையத்தினூடாக வாய்ப்புக் கிடைக்கும் என்று அவர் தெரிவித்தார்.
தற்சமயம் இந்த வைத்தியசாலையில் ஆண்களும் பெண்களுமாக சுமார் 20 பேர் தங்கியிருந்து உடல் மற்றும் உளநல சிகிச்சைகளைப் பெற்று வருகின்றனர்.
இதேவேளை இங்கு ஏற்கெனவே இயங்கிவரும் தொழிற்பயிற்சி நிலையத்தில் மதுவுக்கு அடிமையாகி புனர்வாழ்வளிக்கப்பட்டோரும் இந்தப் புனர்வாழ்வு நிலையத்தைச் சூழவுள்ள கிராமங்களைச் சேர்ந்த பாடசாலையை விட்டு இடைவிலகியோருமாக சுமார் 30 பேர் கைப்பணி உற்பத்திகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
உடல் நோய்களைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பதற்கான இரத்த பரிசோதனைகள், இலவச மருத்துவ ஆலோசனைகள், நஞ்சகற்றல் செயற்பாடுகள், தனிநபர் உளவள ஆலோசனைகள், நடத்தை மாற்ற சிகிச்சைகள், குடும்ப ஆதரவு மற்றும் குடும்பங்களை மீள் இணைத்தலுக்கான வழிவகைகள், சமூகத் திறன் பயிற்சிகள், நெருக்கீட்டு முகாமைத்துவம், சாந்த வழிப் பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு உடல் உள சிகிச்சைகள் இந்த நிலையத்தில் வழங்கப்படுவதாக வைத்தியர் பி. ஜுடி ரமேஷ் ஜெயக்குமார் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment