23 Apr 2016

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு வரும் வரையில் அனைத்து அரசியல் தலைமைகளும் ஒற்றுமைப்பட வேண்டும் - ஜனா

SHARE
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு வரும் வரையில் அனைத்து அரசியல் தலைமைகளும் ஒற்றுமைப்பட வேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய கிழக்கு மாகாண
சபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா) மட்டக்களப்பு வாழைச்சேனையில் அறைகூவல் விடுத்தார்.

கிறவுண் விளையாட்டுக் கழகத்தின் 27 ஆவது வருட நிறைவையொட்டி வாழைச்சேனை கருணைபுரத்தில் உள்ள குழந்தையேசு கிரவுண் விளையாட்டு மைதானத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்ற சித்திரைப் புதுவருட விளையாட்டு விழாவில்  பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த விளையாட்டு விழாவில், கௌரவ அதிதியாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தியும் கலந்து கொண்டிருந்தார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா) இதன்டபோது தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்…

கடந்த காலங்களிலே 2004 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு நமது பிரதேசங்களில் இப்படியான நிகழ்வுகளை நடத்தியிருக்க முடியாது. ஆனால் நடத்தியிருந்தால்கூட அச்சுறுத்தல் இருந்ததும் கிடையாது. ஆனால் 2004 இல் இருந்து 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08 ஆம் திகதி நாங்கள்  தமிழ் மக்கள், வடக்கு கிழக்கில் திறந்த வெளிச் சிறைச்சாலையில் வாழ்ந்தவர்கள் போல் வாழ்ந்து கொண்டிருந்தோம். அந்த நிலைமையில் இப்படியான கூட்டங்கள் கூட்டமுடியாது கூட்டியிருந்தால் கூட அரைவாசிக்கு மேற்பட்டவர்கள் புலனாய்வாளர்களும் உங்களை உளவு பார்ப்பவர்களும் தான் இருப்பதாக இருந்தார்கள்.
ஆனால் அந்த நிலையை மாற்ற வேண்டும் மாற்றித்தான் ஆக வேண்டும் என்று 2015 ஜனவரி 8 இல் அந்த அகோர ஆட்சியை அகற்றினோம். இன்று ஒரு சுமூகமான ஆட்சி இந்த நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாங்கள் அனைவரும் சந்தோசமாக இப்படியான நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று ஒரு அரசியல் தீர்வை தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றும் பொருட்டு செயற்படுகிறது. எமது தலைவர் சம்பந்தர்  அவர்கள் இந்த வருட இறுதிக்குள் அரசியல் தீர்வை எட்டுவோம் என்று  கூறியிருக்கின்றார்.

அந்த இடத்தை நோக்கி நாங்கள் நகர்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் மழை விட்டாலும் தூவானம் விடாது என்பதைப் போல் 2015 ஜனவரிக்கு முன்னர் இனவாதம் பேசி கோர ஆட்சி செய்த அந்த ஆட்சியாளர்களின் சிறு குழுக்கள் ராஜபக்ச குடும்பத்துடன் சேர்ந்து மீண்டும் இனவாதமம் பேசி இந்த நாட்டில் ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்த முனைகின்றார்கள்.

நேற்றுக்கூட பொதுபலசேனா, ராவண பலய போன்ற அமைப்புக்கள் விக்னேஸ்வரனைக் கைது செய்ய வேண்டும், சம்பந்தன் அவர்களை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று குரல் கொடுக்கிறார்கள்.
தென் பகுதிகளில் இனவாதத்தைத் தூண்டி மீண்டும் அவர்கள் ஆட்சிக்கு வர முயல்வது போல் நமது பகுதியிலும் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இங்கு ஒரு ஸ்திரத்தன்மை ஏற்படக்கூடாது என்ற நோக்கில் நடக்காத காரியத்தை, நிறைவேற்ற முடியாத காரியததை, கிடைக்கப்பெறாத காரியத்தை, கேட்டு எங்களது தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் செல்லவிடாது தடுப்பதற்கு அங்கும் ஒரு சக்தியிருக்கிறது. இங்கும் ஒரு சக்தியிருக்கிறது.

என்னைப் பொறுத்தவரையில், தமிழ் மக்களிடம், வடகிழக்கு மக்களிடம் கேட்டுக் கொள்வது என்னவென்றால், நாங்கள் இவ்வளவு அழிவுக்குப்பின்பும் பிரிந்திருக்கப் போகின்றோமா? அல்லது ஒற்றுமையாக ஒரு குடையின் கீழ், ஒரு தலைமையின் கீழ் சிறப்பான உரிமைகளைப் பெற்று அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுக்கின்ற தீர்வைப் பெற வேண்டுமா?

அரசியலைத் தொழிலாகக் கொண்டவனுமல்ல, அரசியலுக்காக வாழ்ந்தவனுமல்ல. இனத்துக்காக 82 ஆம் ஆண்டிலிருந்து ஆயுதம் ஏந்தி இன்று வரை எமது மக்களுக்காக ஆயுத ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், அகிம்சை ரீதியாகவும் ஜனநாயக ரீதியாகவும் போராடிக் கொண்டிருப்பவன். என்ற வகையில் நான் நினைப்பதெல்லாம் நாம் ஒன்று படவேண்டும். தமிழ் இனம் ஒன்று பட வேண்டும்.

அது சந்திரகாந்தன்  பிள்ளையானாக இருந்தாலும் சரி, யோகேஸ்வரன் ஐயாவாக இருந்தாலும் சரி. ஜெயானந்தமூர்த்தியாக இருந்தாலும் சரி, ஜனாவாக இருந்தாலும் சரி. தமிழ் மக்கள் ஒன்று பட வேண்டும். தமிழ் மக்களுக்கான ஒரு நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அதற்காக எங்களது ஒவ்வொரு அடியையும் முன்னோக்கி வைக்க வேண்டும்.

நான் அரசியலுக்கு வந்தது ஒரு தற்செயலான விபத்து. ஆனால் நான் என்றுமே பிரதேசவாதம் பார்த்ததில்லை. ஆனால் எமது பிரதேசத்தில், வடக்குக் கிழக்கிலே போராட்ட காலத்தில் வடக்கு கிழக்கு என்ற பிரதேச வாதம் பார்த்து இன்று நாம் இந்த நிலைமையில் நிற்கின்றோம்.

நான் என்றுமே இயக்கங்களைப் பற்றிக் கதைப்பவன் அல்ல. இதற்கு முதல் கதைத்தவனுமல்ல. எவ்வாறிருந்தாலும் தமிழன் ஒன்றுபட வேண்டும்.
நாம் இன்று அரசியல் செய்து கொண்டிருப்பது எத்தனையோ போராளிகள், பொது மக்களின் ஆத்மாக்களின் மேலிருந்துதான் அரசியல் செய்கின்றோம். கும்மாளம் அடிப்பதற்கும், கூட்டங்களைக் குழப்புவதற்கும் தமிழ் இனத்துக்குள் ஒன்றிரண்டு அடிவருடிகள் இருக்கும் அதற்காக நீங்கள் ஒருவரும் குழம்பக்கூடாது. தமிழ் மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதனை நான் ஆணித்தரமாகக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.

நான் அரசியலைத் தொழிலாகச் செய்பவன் அல்ல. அரசியல் என்பது மக்கள் சேவைக்காக என்றுதான் இங்கு வந்திருக்கிறேன். நான் இந்த மேடையில் நின்று கொண்டிருக்கிறேன் என்றால், 52 வயது முடிந்திருந்தாலும் எனது எண்ணமெல்லாம் 31 வயது காரணம், 85 ஆம் ஆண்டு இலங்கை விசேட அதிரடிப்படையுடன் ஏற்பட்ட நேரடி மோதலில் காயப்பட்ட நான் அன்று இறந்திருந்தால் இன்று உங்கள் முன் நின்றிருக்க மாட்டேன்.

ஒரு மனிதனின் வாழ்க்கை தாயின் கருவறையிலிருந்து கல்லறைக்குச் செல்லும் வரைதான். அந்தக் காலத்தில் நாங்கள் நல்லதையே செய்ய வேண்டும். நல்லதையே நினைக்க வேண்டும். உலகம் ஒரு நாடக மேடை அதில் நாமெல்லாம் நடிக்க வந்த நடிகர்கள். அதில் எனது பாத்திரம் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடுவதே. என அவர் தெரிவித்தார்.


SHARE

Author: verified_user

0 Comments: