மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தின் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ள துறைசார்ந்த நிபுணர்களைக் கொண்ட அரசியல் கலப்படமற்ற புத்திஜீவிகள்
குழுவொன்று நியமிக்கப்பட்டிருப்பதாக அக்குழுவுக்குத் தலைமை தாங்கும் பொறியியலாளர் ஏ.எம்.எம். ஹமீம் தெரிவித்தார்.
ஞாயிறன்று ஏறாவூர் பிரதேசத்தின் ஒருங்கிணைந்த அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதற்கான கலந்தாலோசனைக் கூட்டம் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தலைமையில் ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரியின் பழைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
ஏறாவூர் பிரதேசத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் அரசியல் எதிர்பார்ப்புகளுக்கப்பால் ஒருங்கிணைந்த ரீதியில் அரசியல் கலப்படமற்ற விதத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சரால் வலியுறுத்தப்பட்டதின் அடிப்படையில் துறைசார்ந்தவர்களைக் கொண்ட ஐவரடங்கிய மேற்படி அபிவிருத்திக் குழு நியமிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், பிரதேசத்தில் உடனடியாகவும், தூரநோக்கின் அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் பற்றி முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் வலியுறுத்தினார்.
தெரிவு செய்யப்பட்ட இந்த அபிவிருத்திக் குழு உடனடியாக இயங்கி பிரதேசத்தின் தேவைகள் இனங்காணப்பட்டு அவற்றுக்கான சாத்தியக் கூற்று அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் முதலமைச்சரால் கேட்டுக் கொள்ளப்பட்டது.
கடந்த காலங்களில் துல்லியமான தூரநோக்கு சிந்தனையில்லாமலும் சரியான திட்டமிடலின்மையினாலும் அபிவிருத்தித் திட்டங்கள் இடம்பெறாமல் காலந்தாழ்ந்தப்பட்ட நிகழ்வுகளையும் முதலமைச்சர் உட்பட கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் பலரும் குறிப்பிட்டுப் பேசினர்.
இக்கூட்டத்தில் கல்வி, சுகாதாரம், சமூக சேவை, பொறியியல் மற்றும் நிருவாகத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைசார்ந்த முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment