11 Apr 2016

மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுகளில் சிறுவர்களிடையே மந்த போஷாக்கு நிலைமை காணப்படுகின்றது.

SHARE
“மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 4 சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுகளில் போஷாக்கு மட்டம் குறைந்த அளவில் காணப்படுகின்றது. இந்த நிலைமையை மாற்றக் கூடியதாக இருந்தால் மட்டக்களப்பு மாவட்டம் தேசிய ரீதியில் போஷாக்கு நிலைமையில் சிறப்பான
ஸ்தானத்தைப் பெற முடியும் என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தாய் சேய் நல வைத்திய அதிகாரி எம். அச்சுதன் தெரிவித்தார்.

நாங்கள் உடலளவில் ஆரோக்கியமான சமூகமாக மாறுவதைக் கொண்டு அறிவாற்றலிலும் பொருளாதார ரீதியிலும் பெரும் முன்னேற்றமடையலாம்.” என்றும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் சுகாதார முன்னேற்றளம் தொடர்பாக திங்கட்கிழமை கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுபற்றி தொடர்ந்து கூறிய அவர், தேசிய மட்டத்துடன் ஒப்பிடும்போது மட்டக்களப்பு மாவட்டம் சிறப்பான ஆரோக்கியத்தைக் கொண்டுள்ளது. ஆயினும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை, வாழைச்சேனை. கிரான், செங்கலடி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுகளில் மந்த போஷாக்கு நிலைமை காணப்படுகின்றது.

வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் வசிக்கும் ஒட்டு மொத்த 7000 ஆயிரம் குடும்பங்களில் சுமார் 900 குடும்பங்கள் மந்த போஷாக்கு வகைப்படுத்தலுக்குள் இனங்காணப்பட்டிருக்கின்றார்கள்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட ஆய்வின்படி வாகரையில் அடையாளம் காணப்பட்ட 900 குடும்பங்களில் 40 சதவீதமான குடும்பங்கள் பொருளாதாரப் பிரச்சினை காரணமாக வறுமைக்குட்பட்டவர்களாக இருப்பது இவர்களது மந்த போஷாக்கு நிலைமைக்கான பிரதான காரணமென்று கண்டறியப்பட்டுள்ளது.

ஆயினும், தனித்தனியே இந்தக் குடும்பங்களைப் பற்றிய விரிவான ஆய்வுகளை நாம் மேற்கொண்டுள்ளோம்.
எதிர்வரும் ஜுன் மாதமளவில் இந்த விரிவான ஆய்வுகள் நிறைவு பெறும்.

எனினும், வறுமையைத் தவிர மதுப்பாவினை, உணவுப் பாதுகாப்பின்மை, பெற்றோரின் பராமரிப்பின்மை மூட நம்பிக்கைகள், இதுபோன்று எட்டு வகையான காரணங்கள் மந்த போஷாக்கு நிலைமையில் தாக்கம் செலுத்துகின்றன.

ஒரு வயதுவரை தமது குழந்தைகளுக்கு முட்டையை உணவாகக் கொடுப்பதற்கு மறுக்கும் மூட நம்பிக்கை உள்ள ஆசிரியைகளைப் பற்றியும் நமது ஆய்வில் தெரியவந்துள்ளது.

வாகரை கடலைச் சூழவுள்ள கடலுணவு நிறைந்த பகுதியாக இருந்தும் உள்ளுர் மக்கள் கடல் மீன்களை நுகர்வதற்கு வாய்ப்பளிக்கடாத ஒரு நிலைமை காணப்டுகின்றது.

அதாவது, உள்ளுரில் பிடிக்கப்படும் மீன்கள் கொழும்பு போன்ற வெளியிடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்ற அதேவேளை வெளியூர்களுக்கு மொத்த விலையில் ஒரு கிலோ மீன் 200 தொடக்கம் 300 ரூபா வரையில் விற்கப்படுகின்றன.

அதே மீன்கள் உள்ளுர் கிராமத்தவர்களுக்கு 600 தொடக்கம் 700 ரூபா வரையில் விற்கப்படுவதால் வறியவர்கள் அதனை வாங்கி உண்ண முடியாத நிலைமை காணப்படுகின்றது.

உற்பத்தித்திறனுள்ள ஒரு சமூகம் உருவாக வேண்டு;மாக இருந்தால் அது அறிவாற்றல் பொருந்தியதாக இருக்க வேண்டும் அத்தகைய ஒரு சமுதாயத்தை இப்பொழுதே உருவாக்குவதற்கு சிறார்கள் மத்தியில் போஷாக்கைப் பற்றிய விடயத்தில் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும்.

இத்தகைய அறிவாற்றல் விருத்தியடையும் காலம் முதல் வயது தொடக்கம் ஐந்து வரையாகும். இந்தக் காலப்பகுதியில் சிறார்கள் மீது அவர்களது போஷாக்குச் சம்பந்தமாக எடுக்கப்படுகின்ற அக்கறையே பயனளிக்கும்.

இந்த வயதெல்லையில் போஷாக்கு மந்தம் ஏற்படுமாயின் அது எதிர்கால சந்ததியையும் இந்த நாட்டின் வளர்ச்சியைப் பாதிக்கும்;.

“தாய் ஆரோக்கியமாக இருந்தால்தான் கருவிலுள்ள குழந்தையும் புத்திக் கூர்மையுள்ளதாக வளரும்
இதற்குத் தாய் சேய் நலன் மிக முக்கியம். கர்ப்ப காலத்தில் தாயும் சேயும் போஷாக்கானவர்களாக இருக்க வேண்டும்.

போஷாக்கு சம்பந்தப்பட்ட விடயத்திலே பொதுவாக எல்லோருக்கும் போதிய விழிப்புணர்வு இல்லாமை என்பது ஒரு பெரும் பிரச்சினையாக உள்ளது. குறிப்பாக இந்த விடயத்திலே கூடிய அக்கறை எடுக்க வேண்டும் ” என்றார்.


SHARE

Author: verified_user

0 Comments: