கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்
சிறுபான்மை இனங்கள் ஒற்றுமைப்பட்டு அத்தனை உரிமைகளையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் சித்தாண்டியில் புனரமைக்கப்பட்டுள்ள கால்நடைத் தீவன உற்பத்தித் தொழிற்சாலை சனிக்கிழமை மாலை திறந்து வைத்து உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,
கிழக்கு மாகாணத்திலுள்ள சிறுபான்மை இனங்கள் இன வேறுபாடுகளைக் களைந்தவர்களாக மனம் திறந்து பேசுவதற்குக் காரணமாக அமைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
ஆயினும், பேரினவாதத்தின் திட்டமிட்ட புறக்கணிப்புக்களுக்கு இன்னும் துணை போகின்ற அரசியல் போக்கு நமது சிறுபான்மைச் சமூகங்களிலுள்ள அரசியல்வாதிகள் ஒரு சிலரிடம் இருந்து கொண்டிருப்பது வேதனையளிப்பதாய் உள்ளது.
அரசியல் உரிமைகள் பெறப்பட வேண்டும் என்பதில் தமிழ் சமூகம் கொண்டிருந்த ஆர்வம் முஸ்லிம் சமூகத்திற்கு தாமதமாகித்தான் புரிந்திருந்தது.
ஆயினும் முஸ்லிம் சமூகமும் தமிழ் சமூகத்தோடு இணைந்து அரசியல் உரிமைகளுக்காக ஒருமித்துப் பயணித்த வரலாற்றையும் மறந்து விடுவதற்கில்லை. இப்பொழுது அது மீண்டும் முன்னெடுக்கப்படுகின்றது.
சில விஷம சக்திகளின் சூழ்ச்சிகளில் சிக்கி இப்போதிருக்கின்ற இந்தப் போக்கையும் தவற விட்டுவிட்டால் சிறுபான்மை இனங்கள் தமது அரசியல் உரிமைகளைப் பெறுவதில் தோல்வி அடைந்தவர்களாக ஆகி இன்னும் பல தசாப்தங்களுக்குக்காத்திருக்க வேண்டுவரும்.
சிறுபான்மை இனங்கள் முன்னரிலும் பார்க்க இன்னமும் விழிப்பாக இருக்க வேண்டும். எந்த நெருக்கடிகள் வந்தாலும் அதிகபட்ச உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக நாங்கள் ஒருமித்துப் போராட வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது.
எதிர்கால சந்ததிகளின் தேவை கருதி இரு சமூகங்களும் இந்த இன ஒற்றுமையைப் இறுக்கமாகப் பற்றிப்பிடித்தாக வேண்டும்.
முன்னதாக சமூகங்கள் தங்களுக்குள்ளே இறுக்கமாக ஒற்றுமைப்பட்டுப் கொள்ள வேண்டும்
இழப்புக்களினூடே இன்னும் பின் தங்கிப் போகக் கூடாது.
சுய இலாபங்களை முதலில் மறக்க வேண்டும். சூழ்ச்சிகளில் சிக்கிக் கொள்ளாது எச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டும்.
யுத்தம் முடிவடைந்த பின்னர் கிழக்கு மாகாண மக்கள் சிறந்த கார்பெற் வீதியில் பயணிப்பதை விட வேறெந்த அடிப்படைப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு வாழ்வாதாரத்தில் அபிவிருத்தி கண்டவர்களாக இல்லை. மத்திய அரசின் புறக்கணிப்பே இந்தப் பின்னடைவுக்குக் காரணம்.
நாட்டின் ஒட்டு மொத்த மீன்பிடியில் 26 வீத வளங்களைக் கொண்டிருக்கின்ற நாங்கள் அதனைக் கொண்டு எந்தளவு நாங்கள் அபிவிருத்தி அடைந்திருக்கின்றோம் என்பது இன்னமும் கேள்விக் குறியாக இருக்கின்றது.
துறை சார்ந்த அபிவிருத்தியில் நாம் கவனம் செலுத்த வேண்டும். விவசாயம், மீன்பிடி, கைத்தொழில் போன்ற துறைகளில் ஏற்றுமதி செய்கின்ற மாகாணமாக கிழக்கை நாம் மாற்றியாக வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன், கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே. துரைராஜசிங்கம், கிழக்கு மாகாண சபை பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், ஏறாவூர் வடக்கு மேற்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்க பொது முகாமையாளர் எஸ். உதயநாயகி உட்பட இன்னும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment