11 Apr 2016

கிழக்கு மாகாண போக்குவரத்து சாலைகளில் கடமையாற்றும் ஊழியர்கள் 21 பேரை மத்திய மாகாணத்துக்குச் செல்லுமாறு பணிப்பு ஊழியர்கள் கலக்கத்தில்.

SHARE
கிழக்கு மாகாண போக்குவரத்துச் சாலைகளில் கடமையாற்றும் 21 பஸ் நடத்துநர்களை உடனடியாக மத்திய மாகாணத்திலுள்ள கண்டி வடக்கு போக்குவரத்துச் சாலைக்கு கடமைக்காக
செல்லுமாறு பணிக்கப்பட்டுள்ளதாக அந்த ஊழியர்கள் தெரிவித்தனர்.

இது விடயமான எழுத்து மூல அறிவித்தல் இலங்கைப் போக்குவரத்துச் சபையின் மனித வளப் பிரிவு உதவி முகாமையாளரிடமிருந்து தங்களுக்குக் கிடைத்திருப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இதன் பிரகாரம் கிழக்கு மாகாண டிப்போக்களான ஏறாவூர் சாலையிலிருந்து 4, மட்டக்களப்பிலிருந்து 2 அம்பாறையிலிருந்து 4 பேர் கண்டி வடக்கிற்கும், கல்முனையிலிருந்து 5;, அக்கரைப்பற்றிலிருந்து ஒருவர் யட்டிநுவரவிற்கும், பொத்துவிலில் இருந்து 2, சம்மாந்துறையிலிருந்து 3 பேர் மாத்தளைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தாங்கள் கடமைக் காலத்தின்போது அங்கீகரிக்கப்பட்ட விடுமுறையை விட சம்பளமற்ற விடுமுறை பெற்றுக் கொண்டதால் தங்களுக்கு இந்தத் தண்டனை இடமாற்றம் தரப்பட்டிருப்பதாக இடமாற்ற உத்தரவு கிடைக்கப்பெற்றுள்ள ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆயினும், இரவு பகலாக பல்வேறு அசௌகரியங்களுக்கும் ஓய்வின்றிய வேலையினால் ஏற்படும் உடல் உபாதைகளுக்கும் தாங்கள் உள்ளாவதால் அங்கீகரிக்கப்பட்ட விடுமுறையையும் தாண்டி சம்பளமற்ற விடுமுறையைப் பெற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் தங்களுக்கு ஏற்படுவதாக ஊழியர்கள் தமது கஷ்ட நிலையை வெளிப்படுத்துகின்றனர்.

இதேவேளை, சம்பளமற்ற விடுமுறை பெற்றுக் கொண்டதன் காரணமாக தாங்கள் கடமையாற்றும் சாலைகளில் அமுல்படுத்தப்படும் உள்ளக தண்டங்களுக்கும் தாங்கள் ஏற்கெனவே உள்ளாகியிருப்பதாகவும் ஊழியர்கள் குறிப்பிடுகின்றனர்.
மேலும், தங்களது வயது, குடும்ப சூழ்நிலை, உடல் நிலை, காலநிலைப் பொருத்தம் என்பனவும் இந்த தண்டனை இடமாற்றத்தில் கவனத்திற் கொள்ளப்படவில்லை.

அத்துடன் இத்தகைய இடமாற்றங்களின் மூலம் கிழக்கு மாகாணத்திலுள்ள ஊழியர்கள் மாத்திரம் சிங்களப் பிரதேச சாலைகளுக்கு அனுப்பப்படுகின்றார்கள். ஆனால் சிங்களப் பிரதேச சாலைகளிலிருந்து தண்டனை இடமாற்றம் பெற்ற பெரும்பான்மைச் சமூக ஊழியர்கள் தண்டனை இடமாற்றத்தின் மூலம் இங்கு அனுப்பப்படுவதில்லை என்றும் கூறப்படுகின்றது.




SHARE

Author: verified_user

0 Comments: