3 Mar 2016

வங்கிகள் விவசாயிகளுக்கு கடன் வழங்குவதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு

SHARE
வங்கிகள் விவசாயிகளுக்கு விவசாயக்கடன் வழங்குவதில் கவனம் செலுத்துவதன் மூலம் விவசாயிகள் இடைத்தரகர்களிடமும், பணம் சேர்ப்பவர்களிடமும் சிக்கித் தவிக்கும் நிலையினை மாற்றுவதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
இன்று (03) காலை மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற சிறுபோக பயிர்ச்செய்கை ஆரம்பக்கூட்டத்திலேயே இந்தக் கருத்தினை அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

இவ்வருடத்துக்கான சிறுபோக ஆரம்பக் கூட்டத்தில் வங்கிகளது வருகை விவசாயிகளுக்கு கடன்களை வழங்குவதில் அக்கறையின்மையாக இருப்பது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள், விவசாயிகளால் பிரஸ்தாபிக்கப்பட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அரசாங்க அதிபர், வங்கிகள், விவசாயிகளுக்கு கடன்களை உரிய நேரத்திற்கு வழங்க வேண்டும். இந்தக் கடன்களுக்கு விவசாயிகளிடமிருந்து 7 வீதமும் 8 வீதம் மத்திய வங்கியினாலும் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் பிரயோசனத்தினை விவசாயிகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதேயாகும். அந்த வகையில் வங்கிகள் வர்த்தக நிறுவனங்கள் போன்று செயற்பட முடியாது. விவசாயிகள் கடன்களை செலுத்தவில்லை, அறவிடுவதில் பிரச்சினை என்ற விடயங்கள் குறித்து பேசுவதனை நிறுத்த வேண்டும்.

அதனை விடுத்து விவசாயிகளுக்கு கடன்களை இலகுவாகப் பெற்றுக் கொள்வது எப்படி, மீளச் செலுத்துவது எவ்வாறு என்பவை பற்றிய விளக்கங்களை விவசாயிகளுக்கு மேற்கொள்ள வேண்டும். வங்கிகள் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வருடத்தில் மிகக் குறைந்தளவான விவசாயிகளுக்கே வங்கிகள் கடன்களை வழங்கியிருக்கிறது.

உரிய நேரத்தில் விவசாயிகளுக்கு விவசாயக் கடன்களை வழங்குதல் வேண்டும். அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் மத்திய வங்கியினால் வழங்கப்படுகின்ற அனுகூலங்கள் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும். ஜனாதிபதியினால் கொண்டு வரப்பட்ட தேசிய உணவு உற்பத்தித் திட்டத்தின் முக்கிய பங்காளிகளாக வங்கியாளர்களே செயற்பட வேண்டும்.

எனவே விவசாயிகளுக்கு எவ்விதம் உணவு உற்பத்திக்குப் பயன்படுத்துவது, மீளச் செலுத்துவது போன்ற வங்கிகள் குறித்து தெளிவு படுத்துவதன் மூலம் விவசாயிகள் இடைத்தரகர்களிடமும் பணம் சேர்ப்பவர்களிடமும் சிக்கித் தவிக்கின்ற நிலையினை இல்லாமல் செய்ய முடியும். அதே நேரம் மத்திய வங்கிக்கு மட்டக்களப்பில் விவசாயிகளுக்கு கடன்களை வழங்குவதிலுள்ள சிக்கல்கள் பிரச்சினைகள், வங்கிகளது செயற்பாட்டுக் குறைவு போன்ற விடங்கள் குறித்து அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன், இது தொடர்பான அறிக்கைகளின் பிரதிகள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும் என்றும் அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: