9 Mar 2016

நிலையான எதிர்காலத்திற்கு வலுவான பெண்கள், ஆரோக்கியமான பெண்கள் வளமான குடும்பம்

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தின், கோறளைப்பற்று வடக்கு, வாகரை பிரதேச யெலக பிரிவில் நிலையான எதிர்காலத்திற்கு வலுவான பெண்கள் எனும் தேசிய கருத்திட்டத்தின் கீழ் ஆரோக்கியமான பெண்கள் வளமான குடும்பம் எனும் கருப்பொருளில் மகளிர் தின நிகழ்வுகள் செவ்வாய்க் கிழமை (08) வாகரை சூழலியல் பூங்காவில் பிரதேச செயலாளர் செல்வி எஸ்.ஆர்.ராகுலநாயகி தலைமையில் இடம்பெற்றது.

இதன் முதல் நிகழ்வாக,  பிரதேச மக்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உள்ளடங்களாக, கைகளில் கருப்புப் பட்டியணிந்து பெண்களுக்கெதிரான வன்முறைகளை எதிர்த்து விசேட நடை பவனியானது பிரதேச செயலகத்திலிருந்து ஆரம்பமாகி சுலோகங்களை ஏந்திய வண்ணம் சூழலியல் பூங்காவினை சென்றடைந்தது. அதன் பின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.கங்காதரனின் வரவேற்புரையுடன் பிரதான நிகழ்வுகள் ஆரம்பமாகின.

குறிப்பாக, பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் ஆரபி கலாமன்றத்தினரின் விவாத மேடையானது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. ஆரோக்கியமான குடும்பத்திற்கு காரணம் அம்மாவா? அப்பாவா? எனும் தலைப்பில் சுவாரசியமான முறையில் நடைபெற்றது. மேலும், நியூ ஸ்டார் ஆட்ஸ் கிளப் உறுப்பினர்களினால் விழிப்புணர்வு வீதி நாடகம் மேடை ஏற்றப்பட்டது.

மேலும் இதன்போது 27 சமுர்த்திப் பயணாளிகளுக்கு ரூ.50,000.00 - ரூ.100,000.00 வரையான பணத்தொகை வாழ்வாதாரக் கடனாக வழங்கப்பட்டதுடன், சிறப்பாக சமுர்த்தி சங்கத் தலைவிகள் ஆறு பேர் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அத்துடன், சுயதொழில் செய்யும் பெண்களை மேலும் ஊக்கப்படுத்தும் முகமாக பத்துப் பயனாளிகளுக்கு சுயதொழில் உதவி வழங்கப்பட்டன. 

இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் ஏ.அமலினி, வாழ்வின் எழுச்சித்திணைக்கள முகாமைத்துவ பணிப்பாளர் திருமதி ம.பாஸ்கரன், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கி வலய முகாமையாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள்,  , வேல்ட் விசன் நிறுவன முகாமையாளர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.






SHARE

Author: verified_user

0 Comments: