மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வெவ்வேறு இடங்களில் வைத்து சாராயம், மற்றும் வாகனத்துடன் சட்டவிரோதமாக சாராயம் கடத்திச் சென்ற குற்றச்சாட்டில் மூவர் ஞாயிற்றுக்கிழமை 20.03.2016 கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சட்டவிரோதமாக சாராயம் கடத்தி விற்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள் என்று பொது மக்களிடமிருந்து தகவல் கிடைத்ததின் பேரில் சந்தேக நபர்கள் நடமாடும் இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபர்களைக் கைது செய்ததோடு பெருந்தொகை சாராயத்தையும் முச்சக்கர வண்டி ஒன்றையும் கைப்பற்றினர்.
ஏறாவூர் புகையிரத நிலையத்தடியில் முச்சக்கர வண்டியில் 750 மில்லி லீற்றர் கொண்ட 25 போத்தல் சாராயத்துடன் மட்டக்களப்பு அரசடியைச் சேர்ந்த 41 வயதான நபர் கைது செய்யப்பட்டார்.
அதேவேளை ஏறாவூர் தளவாய்ப் பகுதியில் வைத்து மயிலம்பாவெளியைச் சேர்ந்த 21 வயதான இளைஞனிடமிருந்து 180 மில்லி லீற்றர் கொண்ட 95 சாராய போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், புன்னைக்குடா வீதியில் வைத்து கைது செய்யப்பட்ட 20 வயதான இளைஞனிடமிருந்து 180 மில்லி லீற்றர் கொண்ட 70 சாராய போத்தல்களும் மீட்கப்பட்டன.
நள்ளிரவிலேயே இவர்கள் சட்ட விரோத சாராயக் கடத்தலில் ஈடுபடுவதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வருவதாக பொலிஸார் கூறினர்.
ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி சிந்தக பீரிஸின் வழிநடத்தலில் இந்த சட்ட விரோத சாராயக் கடத்தலுக்கெதிரான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இச்சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஏறாவூர் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment