மீனவர்களின் காணிகள் தனியார் நிறுவனம் ஒன்றிற்கு குத்தகைக்கு வழங்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மனித கழிவுகள் நிலையம் அமைக்கும் பணியை நிறுத்தக்கோரியும் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாலமீன்மடு பகுதியில் உள்ள மூன்று ஆலயங்களுக்கு அருகில் மனித கழிவுகள் மற்றும் மனித சடலங்களை எரிக்கும் நிலையம் அமைக்கப்படுவதை உடனடியாக நிறுத்துமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதேவேளை, நாட்டில் இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தின் போது இந்த பகுதியில் இருந்த ஐம்பது மீனவர்களின் காணிகளை சுற்றுலா விடுதி அமைப்பதற்காக நிறுவனம் ஒன்றிற்கு குத்தகைக்கு வழங்க எடுக்கப்படும் நடவடிக்கையினையும் உடனடியாக நிறுத்துமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாலமீன்மடு பிரதேசத்தினை சேர்ந்த பொது அமைப்புகள் மற்றும் மகளிர் அமைப்புகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தினை நடாத்தியதாக கூறப்படுகிறது.
எமது புண்ணிய பூமியை அசுத்தப்படுத்தாதே, மனிதக் கழிவுகள் எரிக்கும் கட்டடத்தினை நிறுத்து, மீனவர்கள் குடியிருந்த காணிகளை மீள அவர்களிடமே கையளி போன்ற பதாகைகளை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் ஏந்தியிருந்தனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் ஆகியோர் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடினர்.
இதன்போது, மாவட்ட அரசாங்க அதிபருடன் தொடர்புகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் குறித்த மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.
0 Comments:
Post a Comment