28 Feb 2016

நிதி நிறுவனத்தின் உதவி முகாமையாளரான பெண் வெட்டிக் கொலை முகாமையாளர் கைது

SHARE
அம்பாறை மாவட்டம், கல்முனைப் பொலிஸ் பிரிவில் கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள சர்வோதய அபிவிருத்தி நிதிக் கம்பனியின் உதவி முகாமையாளரான பெண்ணொருவர் அந்த அலுவலகத்திற்குள் வைத்து பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் அந்த நிறுவனத்தின் மட்டக்களப்பு முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பிலுள்ள மேற்படி நிறுவனத்தில் முகாமையாளராகப் பணியாற்றும் நற்பிட்டிமுனை மயான வீதியைச் சேர்ந்த பொன்னம்பலம் உதயகுமார் (வயது 41) என்பவர் சனிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கும் 2.30 மணிக்குமிடையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் மேலும் கூறினர்.

குளோரி வீதி நற்பிட்டிமுனை, கல்முனையைச் சேர்ந்த 7 வயதுச் சிறுமியின் தாயான ராஜேந்திரன் சுலக்ஷனா திலீபன் (வயது 33) என்பவரே கழுத்து வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.

வழமை போன்று சனிக்கிழமையும் காரியாலத்திற்குச் சென்று கடமையாற்றிக் கொண்டிருக்கும்போதே இந்தக் கொலை நிகழ்ந்துள்ளது.
அவர் கழுத்தில் அணிந்திருந்த தாலிக்கொடி அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவருடன் கடமையிலிருந்த மற்றொரு வெளிக்கள உத்தியோகத்தர் பகல் போஷனத்திற்காக வெளியில் சென்று மீண்டும் அலுவலகத்திற்கு வந்து பார்த்தபோது இந்த உதவி முகாமையாளர் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் கீழே கிடப்பது கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் நீதிபதியின் உத்தரவுக்கமைய பிரேத பரிசோதனைக்காக சடலத்தை அம்பாறை பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

சம்பவம் பற்றி மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.
கொல்லப்பட்ட உதவி முகாமையாளர் சுலக்ஷனா கடந்த 8 வருடங்களாக மேற்படி நிதி நிறுவனத்தின் மட்டக்களப்பிலுள்ள அலுவலகத்தில் பணிபுரிந்து கடந்த 10 நாட்களுக்கு முன்னரே கல்முனையிலுள்ள அலுவலகத்திற்கு இடமாற்றம் பெற்று வந்துள்ளார்.

இந்த நிதி நிறுவனத்தின் அலுவலகம் கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியில் கல்முனை நகரில் அமைந்திருக்கின்றது.
கொலைச்சம்பவம் இடம்பெற்றதைக் கேள்விப் பட்டதும் ஆயிரக்கணக்கான மக்கள் அவ்விடத்தில் கூடி விட்டனர்.
இதன் காரணமாக கல்முனை நகருக் கூடான போக்குவரத்தும் சிறிது நேரம் பாதிக்கப்பட்டிருந்தது.










SHARE

Author: verified_user

0 Comments: