யாப்பு சீர்திருத்தம் தற்பொழுது நாட்டில் பேசப்படுகின்ற கருப்பொருளாக இருக்கின்றது. ஆனால் இலங்கையில் வாழ்கின்ற சிறுபான்மை மக்கள் இந்த யாப்பு சீர்திருத்தம் காரணமாக கைவிடப்பட்டு விடக்கூடாது என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.
புதன்கிழமை (10) காத்தான்குடி கடற்கரை வீதியில் உள்ள சீ.பீ. காசிம் வீதி திறப்புவிழா நிகழ்வு காத்தான்குடி நகரசபை செயலாளர் ஜே.சர்வேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக், உயர் அதிகாரிகள் மற்றும் அப்பிரதேச மக்களும் கலந்து சிறப்பித்தனர்.
சீ.பீ. காசிம் வீதியினை திறந்து வைத்து விசேட உரையாற்றிய கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்,
வீதிகளை அபிவிருத்தி செய்து மக்களிடம் கையளிப்பதன் நோக்கம் மக்கள் அன்றாட வாழ்க்கை செயற்பாட்டினை இலகுபடுத்துவதற்காகும். அதன் அடிப்படையில் மாகாணசபை நிதியிலிருந்து ரூபா 1,900,000.00 வினை ஓதிக்கீட்டு செய்து காத்தான்குடி கடற்கரை வீதியில் உள்ள சீ.பீ. காசிம் வீதியை கொங்கிரீட் இட்டு சீர்செய்து இன்று மக்களிடம் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளோம்.
கடந்த ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற ஊழல் மோசடிகள் போன்ற செயற்பாடுகளுக்கு அப்பால் சென்று மக்களின் பொதுப்பணம் சரியான முறையில் வெளிப்படை தன்மையுடன் செலவு செய்யப்படுகின்றது என்பதை உறுதிப்படுத்துவதன் முகமாக இவ்வாறான பல செயல் திட்டங்களை செய்துவருகின்றோம்.
யாப்பு சீர்திருத்தம் தற்பொழுது நாட்டில் பேசப்படுகின்ற கருப்பொருளாக இருக்கின்றது. ஆனால் இலங்கையில் வாழ்கின்ற சிறுபான்மை மக்கள் இந்த யாப்பு சீர்திருத்தம் காரணமாக கைவிடப்பட்டு விடக்கூடாது என்ற எதிர்பாப்புடன் அனைவரும் செயற்பட்டு கொண்டிருக்கின்றார்கள்.
கடந்த ஆட்சி போல் இல்லாமல் இந்த நல்லாட்சியில் ஏற்படுத்தப்படவிருக்கின்ற யாப்பு சீர்திருத்தம் மூவின மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அவர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுகின்ற ஓர் யாப்பாக அமையவேண்டும்.
அதிலும் குறிப்பாக வட கிழக்கில் அதிகமாக வாழ்கின்ற சிறுபான்மை மக்களுக்கு எவ்விதமான அநீதிகளும் இழைக்கப்பட்டுவிடாமல், 13ம் திருத்தசட்டதினூடாக வழங்கப்பட்ட அதிகாரங்களை விட அதிகமான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.
அவ்வாறு அதிகாரங்கள் வழங்கப்படும் பட்சத்தில் மாத்திரம்தான் நாட்டிலே இப்பொழுது நிகழ்கின்ற நல்லாட்சியாக இருக்கலாம் அல்லது சமாதான சூழ்நிலையாக இருக்கலாம் அதனை நாங்கள் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என நம்புகின்றோம்.
அந்த வகையில் அரசியல் தலைமைத்துவங்கள் தமக்குள்ள எவ்வாறான கருத்து வேறுபாடுகள், பிளவுகள் இருப்பினும் அவ் அனைத்தையும் அர்பணிப்புடன் களைந்து கட்சி பேதமின்றி அனைவரும் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைத்து எமது சிறுபான்மை மக்களின் உரிமைகளை வென்றெடுக்கின்ற விடயத்தில் தமிழ் முஸ்லிம் என்று பிளவுபட்டுவிடாமல் இந்த யாப்பு மாற்றத்திற்கு சிறுபான்மை என்கின்ற கொடியின் கீழ் நின்றுகொண்டு ஒரேகுரலில் எமது மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment