நல்லாட்சி ஒரு வருட நிறைவினை முன்னிட்டு எதிர்வரும் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் பொதுமக்களுக்காக ஜன - ஜய சைக்கிளோட்டப் போட்டி நடைபெறவுள்ளது என முதன்மைக் கைத்தொழில் அமைச்சர் தயா கமகே தெரிவித்தார்.
நேற்று (05) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
08 ஆம் திகதி அம்பாறை மாவட்டத்தின் தெகியவத்தயிலிருந்து ஆரம்பிக்கும் இச் சைக்கிளோட்டப் போட்டி பொலன்னறுவை மாத்தளையுடன் நிறைவடையவுள்ளது. அதற்கு அடுத்த தினம் 09 ஆம் திகதி காலை மாத்தளையிலிருந்து ஆரம்பிக்கும் இப் போட்டி கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் நிறைவடையும்.இப்போட்டியின் ஏற்பாடுகளுக்கு சுமார் 55 இலட்சம் வரை தேவைப்படுகிறது. ஆனால் இவற்றுக்கான எவ்வித பணமும் அமைச்சின் பணத்திலிருந்து செலவிடப்படாது என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அவ்வகையில் பணவழங்கல் மற்றும் பல ஆதரவுகளை வழங்குவதற்காக நாட்டின் பிம்புத் நிறுவனம் (Bimputh Finance PLC), டயலொக்(Dialog), மற்றும் எல்.ஜி அபான்ஸ் (LG Abans) ஆகியன முன்வந்துள்ளன. அவ்வகையில் பிமுத் நிறுவன நிறைவேற்று அதிகார பணிப்பாளர் டாக்டர் ஹர்ஷ சில்வா, டயலொக் நிறுவன அதிகாரி ரமணன், மற்றும் அபான்ஸ் அஜித் பிரியசாந்த ஆகியார் தமது நிறுவனங்கள் சார்பில் காசோலைகளை அமைச்சர் மற்றும் ஏற்பாட்டாளர்களிடம் கையளித்தனர்.
இப் போட்டியில் அனுமதிப்பத்திரம் பெற்ற நாட்டிலுள்ள அனைத்து சைக்கிளோட்ட வீரர்களும் பங்குபற்ற முடியும். தற்போது வரை சுமார் 150 சைக்கிளோட்ட வீரர்கள் தமது பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். பங்குபற்றி வெற்றி பெறும் அனைவருக்குமாக 15 இலட்சம் ரூபா பெறுமதியான பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
அவ்வகையில் போட்டியில் முதலாம் இடத்தினைப் பெறுபவருக்கு இரண்டரை இலட்சம் ரூபாவும், 2 ஆம் இடத்தினைப் பெறுபவருக்கு 2 இலட்சம் ரூபாவும், 3 ஆம் இடத்தினைப் பெறுபவருக்கு சுமார் ஒன்றரை இலட்சம் ரூபாவும், 4 ஆம் இடத்தினை பெறுபவருக்கு ஒரு இலட்சம் ரூபாவும், 05 ஆம் இடத்தினைப் பெறுபவருக்கு 75,000 ரூபாவும், 06 ஆம் இடத்தினைப் பெறுபவருக்கு 50,000 ரூபாவும், 07 ஆம் இடத்தினைப் பெறுபவருக்கு 40,000 ரூபாவும், 08 ஆம் இடத்தினைப் பெறுபவருக்கு 30,000 ரூபாவும், 09,10 ஆம் இடங்களைப் பெறுவோருக்கு தலா 25,000 ரூபாவும், அதற்குப் பிறகான இடங்களைப் பெறுவோருக்கு தலா 20,000 ரூபாவும் வழங்கப்படவுள்ளது.
அத்துடன் நடைபெறவுள்ள இரண்டு நாள் போட்டிகளை முன்னிட்டு வீதியோரப் பாதுகாப்பு நடவடிக்கைகளும் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என இங்கு கலந்து கொண்டு கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஏ.எஸ்.பி ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment