பாதிக்கப்பட்ட எம்மக்களுக்கு நிவாரணம் கிடைக்க வேண்டும், நல்லாட்சி ஒன்று இந்த நாட்டிற்குத் தேவை, என்ற நோக்குகோடுதான் கடந்த காலத்திலிருந்த மிருகத்தனமான காட்டாட்சியை மாற்றியுள்ளோம். இந்நிலையில்தான் தற்போது எமது காணிகளில் சில பகுதிகள் விடுவிக்கப் பட்டுள்ளதோடு வடக்கு கிழக்கு மக்கள் பயமின்றி வீதிகளில் உலாவக்கூடிய நிலை உருவாகியிருக்கின்றது.
என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தற்போதைய கிழக்கு மகாணசபை உறுப்பினருமான கோ.கருணாகரம் ( ஜனா) தெரிவித்துள்ளார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் துருணு சிரம சக்தி செயற்றிட்டத்தின் கிழ் 250000 ரூபாய் செலவில் புணரமைக்கப்பட்ட மட்டக்களப்பு – எருவில் கிராமத்திலுள்ள பொது நூலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வு வெள்ளிக் கிழமை மாலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்…
இப்புதிய அரசாங்கம் பொறுப்பேற்று ஒரு வருடத்தின் பின்பு ஜனாதிபதியின் அதிகாரங்கள், குறைபக்கப்பட வேண்டும், பழைய தேர்தல் முறைமை புதிதாக கொண்டுவரப்பட வேண்டும், இனப்பிரச்சனைக்கான அரசியல் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும், ஆகிய 3 கோரிக்கைகளையும் முன்வைத்து இந்நாட்டு நாடாளுமன்றம் ஒரு அரசியல் சபையாக மாற்றப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு அவ்வாறு இணைக்கப்படுகின்ற வடகிழக்குப் பகுதிக்குள் முஸ்லிங்களுக்கு ஒரு அலகு வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இனப்பிரச்னைத் தீர்வுக்காக வேண்டி 1985 ஆம் அண்டு திம்புவிலே தொடங்கிய பேச்சுவார்த்தை, இறுதிவரை முன்னேற்றம் எதுவும் நடைபெறாமல் 2009 மே.18 ஆம் திகதி எமது ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னரும், தற்போதைய புதிய ஆட்சியிலே சமஸ்ட்டி தீர்வினை வேண்டி நிற்கின்றோம்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற பண்டா செல்வா ஒப்பந்தம், டட்லி செல்வா ஒப்பதந்தம், போன்றன கிளித்தெறியப்பட்டன அவ்விடையங்களுக்கு மேலாக தற்போதைய ஆட்சியிலே இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும், இணைந்து செயற்படும் இந்த நல்லாட்சியில் நமக்குரியதீர்வு கிடைக்க வேண்டும் இல்லையேல் வேறு எக்காலத்திலும் எமக்குரிய தீர்வு கிடைக்க மாட்டாது.
கடந்த காலங்களில் ஏற்பட்ட இன்னல்கள் இடம்பெறாமலிருக்க வடக்கு கிழக்கு இணைக்கப்படல் வேண்டும், சமஸ்ட் ஆட்சி ஒன்று உருவாக்கப்படல் வேண்டும். இந்த நாட்டில் பெரும்பான்மைச் சமூகம். சிறுபான்மைச் சமூகம் என்ற நிலமை இருக்கக் கூடாது. அந்த இணைந்த வடகிழக்கில் ஒரு முஸ்லிம் அலகு உருவாக்கப்பட வேண்டும் என்பதை எனது கட்சியாக தமீழீழ விடுடலை இயக்கம் 1990 களில் மறைந்த ஜனாதிபதி பிறேமதாசாவின் முன்னிலையில் தெரிவித்திருந்தது. எனவே இணைந்த வடகிழக்கிலே ஒரு முஸ்லிம் அலகைக் கொடுப்பதில் எந்தத்தவறும் இருக்கமாட்டாது.
ஐக்கிய இராச்சியத்திலுள்ள நிருவாகக் கட்டமைப்பைப்போன்ற ஒரு தீர்வை நோக்கி நகரலாமா என்று ஆராய்வதற்கு எமது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தற்போது ஐக்கிய இராச்சியத்திற்குச் சென்றுள்ளார். என அவர் மேலும் தெரிவித்தார்.
எருவில் கிராம இணைஞர் கழகத் தலைவர் இ.வேணுராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான மா.நடராசா, ஞா.கிருஸ்ணபிள்ளை, தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் கலாநிதி.எம்.கோபாலரெத்தினம், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன், உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment