நமது அரசியல் காலங்களில் முறையாக இடப்பட்ட அத்திபாரங்களின் காரணமாகவே இன்று கல்வித்துறையில் சிறந்த அறுவடைகளைப் பெற்று வருகின்றோம் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை கல்விக் கோட்டத்துக்குட்பட்ட அல்-அர்ஹம் வித்தியாலய அதிபர் அலுவலகத்துக்கான தளபாடங்கள் மற்றும் உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், எமது அரசியல் வாழ்க்கையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியலுக்காக எவரையும் பழிதீர்க்கவில்லை.
குறிப்பாக கல்வித்துறையில் இன, மத பிரதேச, அரசியல் வேறுபாடுகளை ஒரு போதும் நாம் பார்த்ததில்லை. ஆசிரிய சமூகமானது சமூகத்தினால் என்றும் போற்றப்பட வேண்டியவர்களாகும். எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனின் நற்கூலியை பெற்றுக் கொள்ளும் ஒரு சமூகமாக ஆசிரிய சமூகம் காணப்படுகின்றது.
தமது பெற்றோர்களுக்கும் மேலாக தமது மாணவர்கள் வாழ்க்கையில் சிறந்த பிரஜைகளாகவும் சமூக அந்தஸ்தை பெற்றுக் கொள்ளக் கூடியவர்களாகவும் இருப்பதற்காக தனது பிள்ளைகளாக நினைத்து தமது கடமைகளுக்கும் பொறுப்புகளுக்கும் மேலாக அர்ப்பணிப்புடனும் தியாக சிந்தனையுடனும் பணியாற்றி வருவது உண்மையில் பாராட்ட வேண்டியதொன்றாகும்.
மாணவராக இருக்கும் காலம் மிகவும் பெறுமதியானவை.அதன் பெறுமானத்தை தனது பிற்பட்ட காலங்களிலேயே நினைத்து வேதனைப்படும் நிலையினை நாம் அனுபவித்து வருகின்றோம். எனவே, நல்லொழுக்கமும் நற்சிந்தனையுமுள்ள சமூகமாக மாணவ சமூகம் கட்டியெழுப்பப்படல் வேண்டும்.அப்போதுதான் கல்வியின் கண்களை திறக்கின்ற சமூகமாகவும் நாளைய தலைவர்களாகவும் இவர்களால் சமூகத்தில் மிளிர முடியும் என்றார்.

0 Comments:
Post a Comment