ஒரு பிரதேசத்தின் அபிவிருத்திக்கு அப்பிரதேசத்தில் அமைந்திருக்கும் சமூக நிறுவனங்களின் ஒத்துழைப்பும் அவசியமாகும் என அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்தியதிகாரி ஏ.எல். அலாவுதீன் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவுள்ள சுகாதார மேம்பாட்டு அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பாக சமூகத் தலைவர்களுக்கு விளக்கமளிக்கும் கலந்துரையாடல் இன்று புதன்கிழமை அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், மக்களுக்கு சரியான வழிமுறைகளை காட்டி அவர்களை சமூகத்தில் சிறந்த பிரஜைகளாக மாற்றுவது நம் எல்லோரினதும் கடமையாகும். எமது பிரதேசத்தில் தற்போது சுகாதார நலம் தொடர்பான அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.இருந்தபோதிலும் எங்களுக்கு வழிகாட்டியாக சமயத் தலைவர்களும் செயற்பட வேண்டும்.
எமது பிரதேசத்தை பொறுத்த வரை தற்போது மக்கள் தொற்றா நோய்களிலிருந்து பாதுகாப்பட்டுள்ளார்கள்.சமூகத்தில் சமூக விரோத செயல்கள், சிறுவர் துஷ்பிரயோகங்கள் என்பன காணப்படுகின்றன. இதனை கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரத் துறை, பொலிஸார் மற்றும் அரச அதிகாரிகளால் மட்டும் இயலாது சமூக நிறுவனங்களும் சமயப் பெரியார்களும் முன்னின்று செயற்பட வேண்டும்.
அப்போது தான் எமது பிரதேசத்தை சகல துறைகளிலும் கட்டியழுப்ப முடியும். மேலும்,அட்டாளைச்சேனை பிரதேசத்தை சுகாதாரத் துறையில் ஒரு முன்மாதிரியாக மாற்றியமைப்பதற்கு திட்டம் வகுத்துள்ளோம். அதற்கு நீங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
0 Comments:
Post a Comment