மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான ஏழை மக்கள் வாழ்ந்து வருகின்றனர் என்று ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மத் ஹனீபா தெரிவித்தார். 'போதை அற்ற நாடு, சுய கண்களால் போதை அற்ற உலகை காண்போம்.
போதைத்தடுப்பு தேசிய நிகழ்ச்சி ஊடாக இளையோருக்கு போதை அற்ற நாடும் நன்நெறி மிகு எதிர்காலமும்' எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு பிரசாரம், ஏறாவூர் மிச் நகரில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், 'கூலித் தொழிலாளிகள் தங்களின் நாளாந்த உழைப்பை மதுபானத்துக்கு தாரை வார்ப்பதால், அவர்களின் குடும்பங்கள் ஏழ்மையில் வாடுகின்றன. இதேவேளை, போதைப்பொருள் பாவனையாளர்கள் நாளடைவில் நோயாளிகளாக ஆகின்றனர். சிலர் சிறைகளில் அடைக்கப்படுகின்றனர்.
இந்தக் காரணங்களினால்; பல குடும்பங்கள் சீரழிவை சந்திக்கின்றன' என்றார். 'மதுபானச்சாலைகளை மூடுவதற்கு அதிகளவான பெண்கள் அணிதிரண்டு ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இவ்வாறான விழிப்புணர்வுகள் இன்னமும் விரிவடைய வேண்டும். மேலும், போதைப்பொருள் பாவனையிலிருந்து மனித குலத்தை விடுவித்தால், வறுமையிலிருந்து எமது சமூகத்தை மீட்டெடுக்க முடியும். இதற்கு மக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கினால் போதை அற்ற சமூகத்தை விரைவில் காணமுடியும்' எனவும் அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment