(மட்டு மைந்தன்)
காலங்கள் கடந்து செல்லும் கணப்பொழுதில் கண்விழித்தெழ முன் பணம் படைத்தவர் முதல் பாமர மக்கள் வரை மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவர் வாழ்விலும் நாளுக்கு நாள் பல மாற்றங்கள் நிகழ்த வண்ணமே உள்ளன. அவ்வாறே நம் நாட்டின் அரசியலிலும் நாளுக்கு நாள் பல மாற்றங்கள் கணப்பொழுதில் நிகழ்ந்த வண்ணமே உள்ளன.
எத்தனை மாற்றங்கள் நிகழ்ந்தாலும் 30 வருடகால ஆயுத்தம் ஏந்திப் போராடிய யுத்தம் அவற்றினால் நம் தமிழ் சமூகம் அனுபவிக்கும் துன்பங்கள் இன்றும் நம்மவர் மனங்களில் மாறாத வடுவாகவே நிலைத்திருக்கிறது.
தமிழர்கள் வரலாற்று ரீதியாக அகிம்சைப் போராட்டம் ஆயுதப் போராட்டங்களில் ஈடுபட்டு யாவும் நிறைவுற்று இன்று அரசியல் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எது எவ்வாறிருந்தும் இன்று வரை தமிழர்களுக்கு இனப்பிரச்சனைக்கான நிரந்தர தீர்வினை மாறி மாறி வரும் பெரும்பான்மை இனத் தலைவர்கள் பெற்றுத் கொடுப்பதகாவும் இல்லை அதில் கவனம் செலுத்துவதாகவும் இல்லை.
அரசியல் ரீதியாகவும் உணர்வு பூர்வமாகவும் நம் தமிழ்களின் நெஞ்சங்களில் இலங்கையின் பெருமான்பான்மையின தலைவர்களுடனான கூட்டு ஒற்றுமை என்பன பின்தங்கியதாகவே காணப்படுகிறது. இதற்கு அந்த தலைவர்களின் செயற்பாடுகளும் காரணமாகவே அமைகிறது என்பதை எவராலும் மறுக்கவே முடியாது.
நாட்கள் கடந்து செல்லும் நிலையில் மாறிமாறி வரும் அரசியல் தலைவர்களினால் தமிழ் மக்களுக்கான தீர்வு பெற்றுக் கொடுக்கப்படுவதாக இல்லை இருந்தும் தமிழ் மக்கள் சிந்திப்பது போன்று தேசிய அரசில் மாற்றங்கள் நிகழ்வதாகவும் இல்லை.
இலங்கை வரலாற்றிலே அரசியலில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்திய கடந்த ஜனாதிபதித் தேர்தலிலே வடகிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்கள் ஒருமித்த குரலாய் ஒலித்தன் பலனாய் சர்வதேசம் வியர்ந்து பார்க்குமளவுக்கு தமிழ் மக்களின் வாக்குகளினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக முடிசூடிக் கொண்டார்.
தமிழர் நலன் பற்றி செவிசாய்க்காத மகிந்த ராஜபக்ஷ கடந்த வடக்கு மாகாண சபைத் தேர்தலிலும் சரிஇ ஜனாதிபதித் தேர்தலிலும் சரி தமிழர்கள் படுதோல்வியடையச் செய்தது யாவரும் அறிந்ததே! ஜனாதிபதித் தேர்தலுக்கு பின் ஒரு சில சுமூகமான மாற்றங்கள் நடைபெற்றாலும் தமிழர்களின் பிரச்சனைக்கான நிரந்தர தீர்வு பற்றி இதுவரை சுமுகமான பதில்கள் கிடைத்ததாக இல்லை. எனவே நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலிலே தமிழர் பிரதிநிதித்துவங்கள் தேசிய அரசில் பேரம் பேசும் சக்தியாக அமைய வேண்டியதே காலத்தின் தேவையாகும்.
தமிழர்களின் 30 வருடகால ஆயுதப் போராட்டம் நிறைவுற்றுள்ள நிலையில் இவ் போராட்டத்தில் தம்மை அர்ப்பணித்தவர்களில் மட்டக்களப்பு வாழ் தமிழ் மக்கள் பெரும் பங்கு வகித்தமையினை அவரும் மறுக்க முடியாது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஆழ்ந்த சிந்தனையில் பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்ட அரசியல் கட்சியே! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகும்.
தமிழ்த் தேசியம்இ சுயநிர்ணயம் அதிகாரப்ப பரவலாக்கம் என்ற அடிப்படைக் கொள்கைகளுடன் வடகிழக்கு வாழ் தமிழர்களின் ஏக பிரதிநிதியாக கடந்த 2004ம் ஆண்டு முதல் இன்று வரை இலங்கை அரசியலிலும் சரி உலக நாடுகளிடையேயும் சரி தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பவர்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மட்டுமே காணப்படுகின்றனர். அவ்வாறே தமிழ் மக்களும் காலத்துக்கு காலம் தமிழ் தலைமைகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தங்கள் பூரண ஆதரவினை வழங்கி வருகின்றமை யாவரும் அறிந்ததே!
மகிந்த ராஜபக்ஷவின் குடும்ப ஆட்சி ஒழிக்கப்பட காரண கர்த்தாக்களாக இருந்த வடகிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்கள் இன்று தமக்காக தம் பிரச்சனைகளை பாராளுமன்றத்தில் ஒலிக்கச் செய்யக்கூடியவர்களை தங்கள் வாக்குப் பலத்தினால் பாராளுமன்றம் அனுப்ப தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். தமிழர்கள் செறிந்து வாழும் பிரதான மாவட்டங்களான யாழ்ப்பாணம் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களைப் பொறுத்தவரையில் யாழ் மாவட்டத்தில் மக்கள் தங்களுடைய வாக்குகளை எந்த கட்சிக்கோ எந்த வேட்பாளர்களுக்கோ வழங்கினாலும் தெரிவாகப்போவது நாவினால் தமிழினை உச்சரிக்கும் தமிழ் உறவுகளே!
அவ்வாறே வன்னி தேர்தல் மாவட்டத்திலும் திருகோணமலை திகாமடுல்லை மாவட்டத்திலும் தமிழர் செறிவுக்கு ஏற்ப தமிழர் பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்பதில் மாற்றமில்லை. இருந்தும் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே தமிழர் பிரதிநிதித்துவங்களுடைய பாராளுமன்றம் செல்லும் நிலை கவலைக்குரியதும் வியப்புக்குரியதாகவும் மாறியிருக்கின்றது.
இலங்கையின் கிழக்கு கரையோரத்தில் அமைந்துள்ள முக்கிய நகரமாகவும் தமிழர்களின் கலை பண்பாட்டு அம்சங்களைக் கொண்ட முக்கிய மாவட்டமாகவும் மட்டக்களப்பு நகர் விளங்குகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் பெரும்பான்மையாக 385000(74ம%) ஆயிரத்துக்கு மேற்பட்ட தமிழர்களும் 133000(24%) மேற்பட்ட முஸ்லீம் மக்களும் 6000 சிங்கள மக்களுமாக மொத்தமாக 525000ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
குறிப்பாக இங்குள்ள மக்களின் பிரதான ஜீவனோபாயமாக விவசாயம் மீன்பிடி கால் நடைவளர்ப்பு வர்த்தகம் ஆகியன அமைகின்றன. இருந்தும் இங்குள்ள மக்களின் பல அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படாத நிலையில் இருப்பது கவலைக்குரியதே!
1978 இல் கொடூர சூறாவளி 2006 இல் சுனாமி தொடர்ந்து யுத்தம் போன்ற அகோரப் பிடிகளில் இருந்து மீண்டெழுந்து வாழும் இவ் மக்களின் தற்போதைய நிலை கவலைக்குரியதே!
தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை நம் தலைவர்கள் முன்மொழிந்ததனைத் தொடர்ந்து நடைபெற்ற 2004ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலே தமிழர்கள் தங்களுடைய வாக்குப் பலத்தினால் 4 தமிழ் பிரதிநிதித்துவங்களைத் தெரிவு செய்திருந்தார்கள். அவ்வாறே தமிழரசிக் கட்சியின் ஊடக தனது அரசியல் வாழ்வினை ஆரம்பித்த மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களினால் தோற்றுவிக்கப்பட்ட முஸ்லீம் காங்கிரஸ் தங்கள் விகிதாசாரத்துக்கு ஏற்ப ஒரு பிரதிநிதித்துவத்தினை பெற்றுக் கொண்டார்கள்.
குறிப்பாக 2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தலினை உற்று நோக்குமிடத்து இலங்கை தமிழரசுக் கட்சி வடகிழக்கு மாகாணங்களில் 633654 வாக்குகளைப் பெற்று மாவட்ட ரீதியாக 20ஆசனங்களையும் தேசிய பட்டியல் மூலமாக 2 ஆசனங்களையும் பெற்று மொத்தமாக 22 ஆசனங்களுடன் மாபெரும் வெற்றியைப் பெற்றுக் கொண்டது.
இத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் இலங்கை தமிழரசுக் கட்சி 57144 வாக்குகளையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 22716 வாக்குகளையும் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் 19612 வாக்குகளையும் கல்குடா தேர்தல் தொகுதியில் இலங்கை தமிழரசுக் கட்சி 43503 வாக்குகளையும் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் 22244 வாக்குகளையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 2706 வாக்குகளையும்இ தனித் தமிழ் தொகுதியான பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் இலங்கை தமிழரசுக் கட்சி 57052 வாக்குகளையும் ஐக்கிய தேசியக் கட்சி 877 வாக்குகளையும் பெற்று மொத்தமாக 161011 வாக்குகளைப் பெற்று இலங்கை தமிழரசுக் கட்சி மாபெரும் வெற்றியினைப் பதிவு செய்தது.
குறிப்பாக 74% வீதம் தமிழர்கள் வாழும் மட்டக்களப்பில் 4 ஆசனங்களை பெற்று வெற்றி பெற்றது என்பதை விட வெற்றி பெற வேண்டிய கட்டாயமே காணப்பட்டது. அவ்வாறே 24% முஸ்லீம் வாழும் மட்டக்களப்பில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் 43131 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தினைப் பெற்றுக் கொண்டதுடன் இத் தேர்தலில் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 26268 வாக்குகளைப் பெற்றாலும் அவர்களால் ஒரு ஆசனங்களையும் கைப்பற்ற முடியாமல் போனது.
இவ்வாறாக 2004 ஆண்டு இடம் பெற்ற தேர்தலில் தமிழர் பிரதிநிதித்துவம் இறைவனின் அருளாலும் தமிழர்களின் ஒன்றிணைந்த பலத்தால் உறுதிப்படுத்தப்பட்டது.
இருந்தும் கடந்த முறை இடம்பெற்ற 2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இவற்றுக்கு மாறாக தமிழர் பிரதிநிதித்துவத்திற்கு ஏற்பட்ட சரிவு இன்றும் பாரிய தாக்கத்தினை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது உலகவாழ் தமிழர்கள் மத்தியிலும் சரி இலங்கை வாழ் தமிழர்கள் மத்தியிலும் தமிழ் மக்களுக்கான பிரச்சனைகளையும் தமிழ் மக்கள் படும் இன்னல்களையும் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் உலக அரங்கு வரை சென்று தட்டிக் கேட்கக் கூடியவர்களாக இருப்பவர்கள் தமிழ்தேசியக் கூட்டமைப்பு மட்டுமே.
இலங்கையில் இடம்பெறும் காலத்துக்கேற்ற அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப தங்களை மாற்றீக் கொள்பவர்களே இன்றைய முஸ்லீம் அரசியல் தலைமைகள். இருந்தும் தமிழ்பேசும் மக்களின் நலன் என்ற கொள்கையின் படி தமிழ் முஸ்லீம் மக்களுக்காக குரல் கொடுக்க கூடியவர்களாக காணப்படுபவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே! ஆனால் கடந்த முறை இடம்பெற்ற பொதுத் தேர்தலிலே 74% வீதமான தமிழர் பிரதிநிதித்துவத்துக்கு 4 இற்கு பதிலாக 3 ஆசனங்களாக பாராளுமன்றத்திற்கு தமிழர்கள் செல்ல வேண்டிய நிலையே ஏற்பட்டது.
எனெனில் கடந்த பொதுத் தேர்தலில் தமிழர்களின் ஏக பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புஇ முன்னாள் கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆகியன தனித்துப் போட்டியிட்டதுடன் தேசியக் கட்சிகள் குறிப்பாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியுடன் இணைந்து போட்டியிட்டதுடன் ஐக்கிய தேசியக் கட்சி தனித்து போட்டியிட்டன.
இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 66235 வாக்குகளையும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசுடன் இணைந்து போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி 62009 வாக்குகளையும் ஐக்கிய தேசியக் கட்சி 22935 வாக்குகளையும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 16886 வாக்குகளையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதனடிப்படையில் அதி கூடிய வாக்குகளைப் பெற்றுக் கொண்டமைக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 1வது ஆசனம் வழங்கப்பட்டதுடன் மேற்படி நான்கு கட்சிகள் பெற்றுக் கொண்ட 168065 எஞ்சிய நான்கு ஆசனங்களுக்காக பிரிக்கப்பட்டபோது ஒரு ஆசனத்திற்காக 42016 வாக்குகள் தேவைப்பட்டன. அதன்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 66235 வாக்குகளில் 42016 வாக்குகள் கழிக்கப்பட்டு 2வது ஆசனமும் வழங்கப்பட்டதுடன் மீதியாக 24219 வாக்குகளைக் கொண்டிருந்தது. அவ்வாறே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிடம் இருந்த 62009 வாக்குகளில் 3வது ஆசனத்துக்காக 42016 வாக்குகள் கழிக்கப்பட்டு மீதியாக 19993 வாக்குகள் இருந்தது. 4ம் 5ம் ஆசனங்களுக்காக எந்தவொரு கட்சியிடமும் 42016 வாக்குகள் இல்லாத நிலையில் அதற்கும் குறைவான வாக்குகளைக் கொண்டிருந்த கட்சிகளில் 24219 மீதி வாக்கினைக் கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 4வது ஆசனமும் மொத்த வாக்குகளான 22935 வாக்குகளைக் கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு 5வது ஆசனமும் கிடைக்கப்பெற்றது.
ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினை விட 4226 வாக்குகளைக் குறைவாக பெற்றுருக்குமானால் 4அல்ல 3அல்ல என்ற நிலை முற்றாக நீங்கி ஒரு ஆசனத்தினைப் பெற்றிருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டிருக்கும். ஆனால் இங்கு போட்டியிட்டு தோல்வியுற்ற முற்று முழுதான தமிழ்க் கட்சியான சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் 16886 வாக்குகளை மாத்திரமே பெற முடிந்ததே தவிர எந்தவொரு ஆசனங்களையும் பெறமுடியாத நிலை ஏற்பட்டது.
இருந்தும் இவர்கள் இத் தேர்தலில் போட்டியிடா விட்டிருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 4ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளக்கூடிய நிலை ஏற்ட்டிருக்கும் அவ்வாறே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட்டிருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு ஆசனத்தினை மட்டுமே பெற்றிருக்கும் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய விடையமாகும்.
இவ்வாறாக 2010 ஆண்டு தேர்தலில் தமிழ் பிரதிநிதித்துவம் முற்றாக மறைக்கப்படக் கூடிய நிலை இருந்தும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு மக்கள் வழங்கிய ஆணைக்கு ஏற்ப தமிழர் பிரதிநிதித்துவம் தக்கவைக்கப்பட்டது. அத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் சீனித்தம்பி யோகேஸ்வரன் 20569 பொன்னம்பலம் செல்வராஜா 18485 பாக்கியச்செல்வம் அரியநேத்திரன் 16504 குணசீலன் சௌந்தராஜன் 14404 வாக்குகளையும்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் மொஹகமட் ஹிஸ்புல்லா 22256 அமீர் அலி சிஹாப்தீன் 16246 அலிஸாஹீர் மௌலானா 12803 சோமசுந்தரம் கணேசமூர்த்தி 6873 வாக்குகளையும் பெற்றுக் கொண்டதோடு
ஐக்கிய தேசிய முன்ணனி சார்பில் பஷீர் சேகுதாவூத் 11678 மொஹமட் மொஹீடீன் 6497 செய்னுல் ஷசைன் 5390 மொஹமட் மூபிர் 5040 வாக்குகளையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
ஆனால் கடந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றி பெற்றிருக்குமானால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளில் நால்வர் முஸ்லீம் பிரதிநிதிகளாக மாறியிருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறாக இத் தேர்தல் நிறைவுற்றுள்ள நிலையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தல் தமிழர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படுகின்ற தேர்தலாகவும் வித்தியாசமான முறையில் பாரிய மாற்றங்களுடனும் புதிய அரசியல்கட்சிகளினதும் சுயட்சைக் குழுக்களினதும் பங்கு பற்றுதல்களுடன் நடைபெறவுள்ளதனை அவதானிக்க கூடியதாகவுள்ளது.
தமிழ்மக்கள் தமக்கான நிரந்தர தீர்வு இம்முறையாவது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் இம் முறை 20ஆசனங்களைக் கைப்பற்றி பேரம்பேசும் சக்தியாக அமைந்து தமிழர்களுக்கான நிரத்தர அரசியல் தீர்வினைப் பெற்றுக் கொள்ளக் கூடிய நிலை உருவாகும் எனவும் அதற்காக தமிழர்கள் ஒன்றினைந்து செயற்பட வேண்டிய தேவை தற்போது அவசியமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு ஏற்றாப்போல் தமிழ்பேசும் சமூகத்தினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை ஆதரிக்க வேண்டிய தேவை தோன்றியுள்ளதனையும் காணக் கூடியதாகவுள்ளது. என்றுமில்லாதவாறு இம் முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் 30 சுயட்சைக் குழுக்களும் 16 அரசியல் கட்சிகளுமாக 46 அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 368 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற நிலையில் இலங்கையிலேயே அதிகளவு குழுக்கள் போட்டியிடும் மாவட்டமாகவும் மிக நீளமான வாக்குச்சீட்டினைக் கொண்ட மாவட்டமாகவும் மட்டக்களப்பு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இத் தேர்தலில் தமிழ் மக்களின் ஒரே அரசியல் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம்களின் தனிக் கட்சியான முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய பிரதான கட்சிகளும்
அதிகளவான சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்ற நிலையில் மக்கள் தங்களுடைய வாக்குகளை மிக உன்னிப்பாக சிந்தித்து வாக்குகள் சிதறடிக்கப்படாமல் உரிய முறையில் தங்களுடைய ஜனநாயகத் தேவையினை நிறைவேற்ற வேண்டிய தேவை காணப்படுகின்றது.
மக்கள் பிரதிநிதிநிதித்துவத்துக்கு ஏற்ப தமிழர் பிரதிநிதித்துவம் 4ஆகவும் முஸ்லீம் பிரதிநிதித்துவம் 1ஆகவும் அமையவேண்டும். ஆனால் இன்றைய சூழ்நிலை மிகவும் மாற்றமடைந்ததாகவே காணப்படுகிறது. தனித் தமிழ்க் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து முதன்மை வேட்பாளரான பொன்.செல்வராஜா பா.அரியநேத்திரன் சீ.யோகேஸ்வரன் கோ.கருணாகரன் இ.துரைரெட்ணம் கு.சௌந்தராஜன் ஞா.சிறிநேசன் ச.வியாளேந்திரன் ஆகியோரும்
முஸ்லீம்களின் தனிக் கட்சியான முஸ்லீம் காங்கிரசிலிருந்து முதன்மை வேட்பாளரான அலிசாஹீர் மௌலானா, சிப்லி பாறுக் முகமத்து றியாழ், அப்தூர் ரகுமான் சம் சுதீன் நமிழ் அலியார் நசீர் முகமது தஸ்லீம் முகம்மது அல்அஸாத் ஆகியோரும்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் முதன்மை வேட்பாளரான முகமட் ஹிஸ்புல்லா சாலி ஜாவாஹிர்இ முகமட் சுபைர் ஆகிய மூன்று முஸ்லீம் வேட்பாளர்களும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் இ.சாணக்கியன் கி.சிவநேசன் செ.அரசரெட்ணம் எ.ஜோர்ச்பிள்ளை ஆகிய ஐந்து தமிழ் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
அவ்வாறே ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் முதன்மை வேட்பாளரான அமீர் அலி முகமட் சாகாப்தீன்இ ஏ.கியாஸ்தீன் அப்துல் நசீப் அப்துல் அஸீஸ் ஆகிய நான்கு வேட்பாளர்களும் சோ.கணேசமூர்த்தி ஆஜெகன் தி.லோகநாதன் எஸ்.மாமாங்கராசா ஆகிய நான்கு தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இவ்வாறனவர்கள் இம் முறை தேர்தலில் போட்டியிடும் நிலையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராஜா சீ. யோகேஸ்வரன் பா.அரியநேத்திரன் முகமட் ஹிஸ்புல்லா ஆகியோர் மீண்டும் தேர்தலில் களமிறங்கியுள்ளனர் .
கடந்த முறை ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் தெரிவான பஷீர் சேகுதாவூத் இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் இன்றைய நிலையினை உற்று நோக்குமிடத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெறக் கூடிய நிலை காணப்பட்டாலும் கள நிலவரத்திற்கு ஏற்ப தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மாற்றங்கள் ஏற்படக் கூடிய நிலையே காணப்படுகிறது.
எனெனில் கடந்த முறை முஸ்லீம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட்ட நிலையில் இம் முறை தனித் தனியாக போட்டியிடுகின்றனர். கடந்த முறை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து ஒரே அணியாக போட்டியிட்ட மொஹமட் ஹிஸ்புல்லா அமீர் அலி அலிசாகீர் மௌலானா ஆகிய மூவரும் இம் முறை தனித் தனியே பிரதான கட்சிகளில் போட்டியிடுகின்றனர். இதனடிப்படையில் 22256 வாக்குகளை கடந்த முறை பெற்ற மொஹமட் ஹிஸ்புல்லா 16000 வாக்குகளுக்கு மேல் பெற்ற சி.சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மற்றும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் பட்டிருப்பு தொகுதியில் மகிந்தவுக்காக வாக்குகளை அதிகரிக்க செய்வதற்கு பெரும் பங்காற்றிய இ.சாணக்கியன் ஆகியோர் ஒரே அணியில் போட்டியிடுகின்றனர்.
இதனால் தமிழர் வாக்குகள் பிரிக்கப்பட்டுச் செல்லக் கூடிய நிலை காணப்படுவதோடு ஆனால் வரலாறுகளை நோக்குமிடத்து அதற்கான வாய்ப்புகள் மிக குறைவானதாகவே காணப்படுகிறது.
அவ்வாறே இம் முறை ஐக்கிய தேசியக் கட்சியில் கடந்த முறை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு 16246 வாக்குகளைப் பெற்ற அமீர் அலி 6873 வாக்குகளைப் பெற்ற சோ.கணேசமூர்த்தி ஆகியோர் ஒரே அணியில் போட்டியிடுகின்றனர். இதன் மூலமாகவும் தமிழர் வாக்குகள் பிரிக்கப்பட்டு சகோதர சிறுபான்மையின பிரதிநிதிகள் தெரிவாகக் கூடிய வாய்ப்புகளே அதிகளவில் காணப்படுகிற நிலையினை அவதானிக்க கூடியதாகவுள்ளது.
மிக முக்கியமாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஊடாகவோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாகவோ தமிழர்கள் பாராளுமன்றம் செல்வார்க ளேயானால் மட்டக்களப்பில் தெரிவு செய்யப்படும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் மேற்படி
எனெனில் கட்சிகளில் போட்டியிடும் முஸ்லீம் வேட்பாளர்கள் தமிழர் வாக்குகளை விட கடந்த தேர்தல்களில் அதிகளவான வாக்குகளைப் பெற்றவர்களாகவே காணப்படுகின்றனர்.
இருந்தும் கடந்த முறை ஒரே கட்சியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் இம் முறை தனித் தனியாக களமிறங்கியுள்ளதால் முஸ்லீம் மக்களுடைய வாக்குகளும் பிரிக்கப்பட கூடிய நிலை ஒன்று காணப்படுவதனால் பெரும்பான்மை கட்சிகளில் போட்டியிடும் தமிழர்கள் அதிக வாக்கு வங்கியினை கொண்ட முஸ்லீம் வேட்பாளர்களை விட அதிக வாக்குகளைப் பெறுவார்களைனால் முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டு தமிழர்கள் தெரிவாகக் கூடிய நிலையும் காணப்படுகிறது.
அவ்வாறே கடந்த முறை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட அலிசாஹீர் மௌலானா 12803 வாக்குகைளைப் பெற்றதுடன் இம் முறை முஸ்லீம் காங்கிரஸ் சார்பில் முதன்மை வேட்பாளராக போட்டியிடுகின்ற நிலையில் 35000 மேற்பட்ட மொத்த வாக்குகளைப் பெறுமிடத்தே அக் கட்சி சார்பில் தங்களுடைய பிரதிநிதித்துத்தினை உறுதிப்படுத்தக் கூடியதாக அமையும்.
அவ்வாறே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 70000 வாக்குகளைப் பெறுமிடத்தே தங்களுடைய கடந்த முறை பெற்ற 3 பாராளுமன்ற உறுப்பினர்களையாவது தக்கவைக்க முடியும் என்பதோடு 120000 மேற்பட்ட வாக்குகளைப் பெறுவார்களானால் 4ஆசனங்களையும் பெற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சாதனை படைக்க கூடிய நிலையும் காணப்படுவதனை அவதானிக்க கூடியதாகவுள்ளது.
இவ்வாறான நிலையில் தமிழர்கள் வாக்குகள் பல விதங்களில் பிரித்தாளக் கூடிய நிலையில் அவ்வாறே முஸ்லீம் மக்களின் வாக்குகளும் சிறு தொகையேனும் பிரிந்து செல்லும் நிலையில் மட்டக்களப்பு தமிழ் பேசும் உறவுகள் தங்கள் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை சரியான முறையில் உறுதிப்படுத்த முடியாத அவலை நிலை ஒன்றே தோற்றுவிக்கப்படும்.
எனவே தமிழ் மக்கள் தங்களுடைய பிரச்சனைகளை உலக அரங்கு வரை கொண்டு சென்றிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிப்பதன் ஊடாக தங்களுடைய பிரதிநிதிகள் தேசிய அரசில் பேரம் பேசும் சக்தியாக மாற்றமடைவதற்கு வழிவகைகளை ஏற்படுத்தி கொடுப்பதுடன் அவ்வாறே முஸ்லீம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லீம் காங்கிரசுக்கு வாக்களிப்பதன் மூலம் தங்களுடைய முஸ்லீம் பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்த முடியும்.
எனவே மக்கள் தங்களுடைய ஜனநாயக தெரிவுக்கு ஏற்ப தற்கால அரசியல் சூழ் நிலைகளைப் புரிந்து கொண்டு தங்களுடைய வாக்குகளை வழங்க வேண்டுமென்பதுடன் வாக்குரிமையை சரியான முறையில் பயன்படுத்த வேண்டியதுடன் வாக்குகளை அழித்து தங்கள் பிரதிநிதிகளை உறுதிப்படுத்த வேண்டியது காலத்தின் தேவையாகும்.
எனவே மட்டக்களப்பு நகரில் வாழும் 74% தமிழர்களுக்கு 4 ஆசனங்களும் 24ம% வாழும் முஸ்லிம் மக்களுக்கு ஒரு பிரதிநிதித்துவமும் கிடைக்கப் பெற வேண்டுமென்பதுடன் மட்டக்களப்பு வாழ் மக்கள் தங்கள் வாக்குப் பபலத்தினை பயன்படுத்தி பாராளுமன்றம் அனுப்பி வைக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூலம் மட்டக்களப்பு மாவட்டம் அபிவிருத்தி அடைய வேண்டுமென்பதோடு மக்களினுடைய வாழ்வாதாரமும் உயர்த்தப்பட வேண்டுமென்பதுமே அனைவருடைய எதிர்பார்ப்பாகும்.
இன்றைய அரசியல் சூழ் நிலைக்கேற்ப வடிவமைக்கப்பட்ட இவ் கட்டுரை இன்றைய மட்டக்களப்பு அரசியல் சூழலினை வெளிப்படுத்துவதோடு மூவின மக்களினுடைய அரசியல் பிரதிநிதித்துவங்களுடைய தேவை பற்றியும் வடிவமைக்கப்பட்ட ஜதார்த்த நிலையுடன் கூடிய ஆய்வாகும். பேனா முனையிலிருந்து வரையப்பட்ட இக் கட்டுரையின் ஜதார்த்த நிலையினை மக்கள் புரிந்து கொண்டு மக்கள் தங்களுடைய வாக்குப் பலத்தினை பயன்படுத்தி அவர்களுடைய ஜனநாயகக் கடமையினை நிறைவேற்ற வேண்டியது காலத்தின் தேவையாகும்.
0 Comments:
Post a Comment